பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை


பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத தலைமை ஆசிரியை பணியிடை நீக்கம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 2:52 AM IST)
t-max-icont-min-icon

கிருஷ்ணகிரி அருகே பள்ளிக்கு உரிய நேரத்திற்கு வராத தலைமை ஆசிரியையை பணியிடை நீக்கம் செய்து கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டுள்ளார்.

கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்திற்கு உட்பட்ட தேவசமுத்திரம், கட்டிகானப்பள்ளி ஊராட்சிகளில் டெங்கு காய்ச்சல் தடுப்பு மற்றும் சுகாதார பணிகள் நடந்து வருகின்றன. இதை கலெக்டர் கதிரவன் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். இதையொட்டி தேவசமுத்திரம் கிராமத்தில் ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்ட போது, பள்ளிக்கு உரிய நேரத்திற்கு பள்ளியின் தலைமை ஆசிரியை வாணி வராதது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து பள்ளி தலைமை ஆசிரியை வாணியை பணியிடை நீக்கம் (சஸ்பெண்டு) செய்ய மாவட்ட கல்வி அலுவலருக்கு கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து பள்ளி குடிநீர் தொட்டிகள், கழிவறைகளை ஆய்வு மேற்கொண்டு பள்ளி அருகில் இடியும் நிலையில் உள்ள பழைய பள்ளி கட்டித்தை இடிக்க அவர் உத்தரவிட்டார். தொடர்ந்து வீடு, வீடாக சென்று குடிநீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் உள்ளனவா? என்பதையும், வீட்டின் மேல் தளங்களில் தேவையற்ற டயர்கள், பிளாஸ்டிக் கழிவுகள் உள்ளதை தூய்மை பணியாளர்களை கொண்டு உடனடியாக அகற்றும் பணிகளையும் பார்வையிட்டார்.

தேவசமுத்திரம் கிராமத்தில் சரளா என்பவரின் வீட்டில் டயர்களில் மழைநீர் தேங்கி கொசுப்புழுக்கள் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டு அவருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார். இதே போல செல்லப்பன் என்பவரது இடியும் நிலையில் உள்ள பழைய வீட்டை உடனடியாக இடித்து அகற்றவும் கலெக்டர் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கட்டிகானப்பள்ளி ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் மருத்துவமனையில் மருத்துவ கழிவுகள் வெளியிடங்களில் கொட்டப்பட்டுள்ளதை உடனடியாக சுத்தம் செய்யவும், மருத்துவமனைக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், அதே பகுதியில் உள்ள தனியார் மருத்துவமனையை ஆய்வு மேற்கொண்டு சுகாதார சீர்கேட்டிற்காக அந்த மருத்துவமனைக்கும் நோட்டீஸ் வழங்க உத்தரவிட்டார்.

இதைத் தொடர்ந்து மருத்துவ கழிவுகளை அகற்றவும், காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்களுக்கு அளிக்கப்படும் சிகிச்சைகள் குறித்தும் கலெக்டர் ஆய்வு செய்தார். தொடர்ந்து வீட்டு வசதி வாரிய குடியிருப்பில் உள்ள வீட்டில் தேவையற்ற பிளாஸ்டிக் கழிவு பொருட்கள் அதிகம் வைக்கப்பட்டிருந்ததை ஆய்வு மேற்கொண்டு வீட்டு உரிமையாளருக்கு ரூ. 5 ஆயிரம் அபராதம் விதிக்க உத்தரவிட்டார்.

இந்த ஆய்வின் போது நலப்பணிகள் இணை இயக்குனர் டாக்டர் அசோக்குமார், சுகாதார பணிகள் துணை இயக்குனர் டாக்டர் பிரியாராஜ், வட்டார வளர்ச்சி அலுவலர் ராஜா, பிரசன்னா, துணை வட்டார வளர்ச்சி அலுவலர் கார்த்தி மற்றும் சுகாதார அலுவலர்கள் உடன் இருந்தனர்.


Related Tags :
Next Story