நெய்யமலையில் 3 கி.மீ. தூரம் புதிய தார்சாலை அமைக்கப்படும் கலெக்டர் ரோகிணி தகவல்


நெய்யமலையில் 3 கி.மீ. தூரம் புதிய தார்சாலை அமைக்கப்படும் கலெக்டர் ரோகிணி தகவல்
x
தினத்தந்தி 3 Nov 2017 4:30 AM IST (Updated: 3 Nov 2017 3:07 AM IST)
t-max-icont-min-icon

நெய்யமலையில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கப்படும் என கலெக்டர் ரோகிணி தெரிவித்தார்.

சேலம்,

சேலம் மாவட்டம் பெத்தநாயக்கன்பாளையம் ஊராட்சி ஒன்றியம் நெய்யமலை பகுதியில் வளர்ச்சி திட்ட பணிகள் குறித்து நேற்று கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வுக்குப்பின் அவர் கூறியதாவது:-

நெய்யமலையில் 800 குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்குள்ளவர்கள் விளைபொருட்களை விற்பனைக்காக மற்றும் இதர போக்குவரத்து தேவைகளுக்காக சுமார் 8 கிலோ மீட்டர் மலைப்பகுதியில் இருந்து தரை தளத்திற்கு எடுத்து வருகின்றனர்.

இதில் 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு வனத்துறையின் காப்புக்காடு அமைந்துள்ளதால் இதுவரை சாலை வசதி இல்லாமல் இருந்தது தெரியவந்தது. காப்புக்காடுகள் அமைந்துள்ள பகுதிகளில் பொதுமக்களின் தேவைக்காக வனத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ள 3 கிலோ மீட்டர் தூரத்திற்கு புதிய தார் சாலையினை அமைத்து தர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மேலும், 13.12.2005 முதல் நெய்யமலையில் வசிக்கும் மலைவாழ் மக்கள் அந்த பகுதியில் நடைபெறும் கிராம சபை கூட்டத்தில் வன உரிமை சட்டத்தின் கீழ் வீட்டுமனைப்பட்டா, நில உரிமைப்பட்டா கேட்டு மனுக்களை அளிக்கும் பட்சத்தில் உடனடியாக அலுவலர்களை கொண்டு அவர்களுக்கு பட்டா வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்படும்.

இதனால் அரசால் கட்டித்தரப்படும் வீடுகள் உள்ளிட்ட இதர பயன்பாட்டிற்கு இந்த வீட்டுமனை, நிலஉரிமை பட்டாக்கள் பயனுள்ளதாக இருக்கும். இதுவரை இந்த பகுதியில் 62 பேருக்கு மேற்குறிப்பிட்ட முறையில் பட்டா வழங்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இப்பகுதி மலைவாழ் மக்களுக்கு போதிய விழிப்புணர்வு ஏற்படுத்திட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது. மேலும் மலைவாழ் மக்களின் தேவைகள் அனைத்தும் உடனடியாக நிறைவேற்றித் தர அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

இந்த ஆய்வின்போது வேடியம்மாள் என்பவர் தெரிவித்த கோரிக்கையின் பேரில் முதியோர் உதவித்தொகைக்கான ஆணை வழங்கப்பட்டது. அதேபோல் அங்குள்ள பள்ளியில் கலெக்டர் ரோகிணி மாணவர்களுக்கு பாடம் நடத்தினார். ஆய்வின்போது ஆத்தூர் வன அலுவலர் பெரியசாமி, உதவி கலெக்டர் செல்வம், ஊரக வளர்ச்சி முகமை செயற்பொறியாளர் ஆறுமுகம், திட்ட அலுவலர் சுந்தரம் உள்பட பலர் உடன் இருந்தனர்.

இதைத்தொடர்ந்து வெள்ளாளப்பட்டி ஊராட்சி, செக்கடிப்பட்டி ஊராட்சி பகுதியில் உள்ள வீடுகளுக்கு சென்று டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டார். முன்னதாக சேலம் அஸ்தம்பட்டியில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு பணிகளை கலெக்டர் ரோகிணி பார்வையிட்டார். 

Next Story