மழை பாதிப்புகளை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை 16 குழுக்கள் அமைப்பு நாராயணசாமி தகவல்
மழையினால் ஏற்படும் பாதிப்பினை தடுக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளதாக முதல்–அமைச்சர் நாராயணசாமி கூறினார்.
புதுச்சேரி,
புதுச்சேரியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் என கண்டறியப்பட்ட பகுதிகளில் முதல்–அமைச்சர் நாராயணசாமி நேற்று காலை அமைச்சர்களுடன் சென்று ஆய்வு நடத்தினார். அதன்பின் பேரிடர் மேலாண்மை மற்றும் பாதுகாப்பு மையத்தில் அதிகாரிகளுடன் அவர் ஆலோசனை நடத்தினார்.
இதில் அமைச்சர்கள் நமச்சிவாயம், மல்லாடிகிருஷ்ணாராவ், கந்தசாமி, ஷாஜகான், கமலக்கண்ணன், துணை சபாநாயகர் சிவக்கொழுந்து, லட்சுமிநாராயணன் எம்.எல்.ஏ., தலைமை செயலாளர் மனோஜ் பரிதா, அரசு செயலாளர்கள் கந்தவேலு, ஜவகர், கலெக்டர் சத்யேந்திரசிங் துர்சாவத், கடலோர காவல்படை கமாண்டர் தியாகி, சுகாதாரத்துறை இயக்குனர் ராமன், பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் சண்முகசுந்தரம், உள்ளாட்சித்துறை இயக்குனர் முகமது மன்சூர், நகராட்சி ஆணையர்கள் கணேசன், ரமேஷ் மற்றும் கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர்கள், அதிகாரிகள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் வடகிழக்கு பருவமழை காலத்தில் சேதங்களை தவிர்க்க எடுக்கப்பட வேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது. இதையொட்டி எடுக்கப்பட்டுள்ள நடவடிக்கைகள் குறித்து அதிகாரிகள் விளக்கம் அளித்தனர்.
கூட்டம் முடிந்ததும் முதல்–அமைச்சர் நாராயணசாமி நிருபர்களிடம் கூறியதாவது:
மழை தொடங்கி உள்ள நிலையில் அதிக அளவில் தண்ணீர் தேங்கும் என்று கண்டறியப்பட்ட பகுதிகளில் அரசு அதிகாரிகளுடன் ஆய்வு நடத்தினோம். நகரின் பல்வேறு இடங்களில் கழிவுநீர் வாய்க்கால்கள் தூர்வாரப்பட்டுள்ளன. சில இடங்களில் தூர்வாரும் பணிகள் நடந்து வருகின்றன.
பூமியான்பேட்டை பகுதியில் இன்னும் சரியாக தூர்வாராததால் வாய்க்காலில் கழிவுநீர் சரியாக செல்லவில்லை. எப்போதும் தண்ணீர் தேங்கி நிற்கும் இந்திராகாந்தி சிலை அருகில் வாய்க்கால்களை தூர்வாரி மாற்று வழிகள் ஏற்படுத்தப்பட்டதால் தண்ணீர் தேங்கவில்லை.
முதல்கட்ட ஆய்வு முடிந்துள்ள நிலையில் பருவமழையை எதிர்கொள்ள அனைத்து அதிகாரிகளும் தயார் நிலையில் உள்ளனர். வருவாய்த்துறையுடன் அனைத்து துறைகளும் ஒருங்கிணைந்து செயல்படுவது என்று முடிவு எடுக்கப்பட்டுள்ளது. கிராமம் மற்றும் நகரப்பகுதிகளில் பாதுகாக்கப்பட்ட குடிநீரை வழங்கவும் ஏற்பாடுகள் நடந்து வருகிறது.
குடிமைப்பொருள் வழங்கல் மற்றும் கல்வித்துறையும் ஒருங்கிணைந்து நீர் தேங்கி இருக்கும் இடங்களில் உள்ள மக்களை மீட்டு அவர்கள் தங்குவதற்கு இடமும் உணவும் தயாராக உள்ளன. ஒவ்வொரு தொகுதியிலும் தலைமை அதிகாரி ஒருவரை நியமித்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
மழையினால் இதுவரை எந்த இழப்பும் ஏற்படவில்லை. மழை காரணமாக நோய்கள் ஏற்படாமல் இருக்க சுகாதாரத்துறை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுத்துள்ளது. புதுவை கடலோர பகுதியாக இருப்பதால் கடலோர காவல்படை மற்றும் காவல்துறையினர் தயாராக இருக்க அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
கிராமப்புறங்களில் உள்ள விவசாயிகள், பொதுமக்கள் பாதிக்கப்படாமல் இருக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. பாவாணர் நகர், கிருஷ்ணாநகர் உள்ளிட்ட பகுதிகள் தாழ்வான பகுதிகளாக அடையாளம் காணப்பட்டுள்ளது. மழை முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்க 16 குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.