வவ்வால்கள்: கொசுக்களின் எதிரி... விவசாயிகளின் நண்பன்!


வவ்வால்கள்: கொசுக்களின் எதிரி... விவசாயிகளின் நண்பன்!
x
தினத்தந்தி 3 Nov 2017 3:20 PM IST (Updated: 3 Nov 2017 3:20 PM IST)
t-max-icont-min-icon

வவ்வால்கள்!, தலைகீழாகத் தொங்கிக் கொண்டு வாழும் அபூர்வ உயிரினத்தை பற்றிய சுவாரஸ்யங்களை பார்ப்போமா...

வவ்வால்கள் இரவில் மட்டுமே, அதுவும் இருளில் மட்டுமே உலவும் உயிரினமாகும். 

* வவ்வால்கள் பறக்கும் ஒரே பாலூட்டி உயிரினமாகும். அதாவது குட்டிபோட்டு பாலூட்டும் உயிரினங்களில் இது மட்டுமே பறக்கும் திறன் பெற்றுள்ளது.

* உலகில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட வவ்வால் இனங்கள் உள்ளன. அமெரிக்காவில் மட்டும் வேறெங்கும் காணப்படாத 40 வகை வவ்வால் இனங்கள் உள்ளன. உலகில் உள்ள பாலூட்டி இனங்களில் நான்கில் ஒரு பங்கு உயிரினம் வவ்வால்கள்தான். 

* பெரும்பாலும் வவ்வால்கள் ஆயிரக்கணக்கில் கூட்டமாக வாழும். குகை, உயரமான மரக்கிளைகள், பொந்துகள் போன்றவையே அவற்றின் இருப்பிடங்களாகும். அரிதாக சில வவ்வால்கள் தனியே வசிக்கின்றன.

* வவ்வால்கள் 20 ஆண்டுகள் ஆயுள் கொண்டவை. மணிக்கு 90 கிலோ மீட்டர் வேகத்தில் பறக்கக் கூடியது.

* வவ்வால்கள் இரவில் மட்டும் உலவும் உயிரின வகையாகும்.

* இருளில் பயணிப்பதற்காக வவ்வால்கள் எதிரொலித்தல் முறையைப் பயன்படுத்துகிறது. நம்மால் கேட்க முடியாத மெல்லிய ஒலியை எழுப்பிக் கொண்டே செல்லும் வவ்வால்கள், ஒலியலைகள் எதிரில் இருக்கும் பொருளின் மீது பட்டு திரும்புவதை அடிப்படையாகக் கொண்டு பயணிக்கிறது. அதனால்தான் நமக்கு நேராக வேகமாக வந்து கொண்டிருக்கும் வவ்வால்கள், நம்மை நெருங்கியதும் சடாரென்று திரும்பிப் பறப்பதை கவனிக்கலாம்.

* இரையாக பயன்படும் பூச்சிகளில் இருந்து கிளம்பும் கதிர்வீச்சு/ ஒலியலைகளை கவனித்தே அவற்றை இரையாக்கிக் கொள்கின்றன. பூச்சிகள் அல்லாமல் பழங்களையும் சாப்பிடும். தேனை ருசிக்கும் வவ்வால் இனங்களும் உள்ளன. சில வவ்வால் இனங்கள் மீன்களைப் பிடித்து உண்கின்றன.

* 3 வவ்வால் இனங்கள் மற்ற உயிரினங்களின் ரத்தத்தை உறிஞ்சிக் குடித்து உயிர் வாழும் பண்பைப் பெற்றுள்ளன. இந்த இனங்கள் ரத்தக் காட்டேறி வவ்வால்கள் எனப்படுகின்றன. முயல்கள், மீன்கள் என பல்வேறு சிறிய உயிரினங்களை தூக்கிச் சென்று கூட்டமாகத் தாக்கி, கடித்து ரத்தத்தை உறிஞ்சுகின்றன. அரிதாக இவை மனிதர்களையும் தாக்குகின்றன. இவற்றின் பற்கள் உயிரினங்களின் தோலைத் துளைக்கும் வகையில் மிகக்கூர்மையாக உள்ளன.

* ‘டெரோபஸ் பேட்ஸ்’ எனப்படும் வவ்வால் இனமே உலகில் மிகப்பெரிய வவ்வால் இனமாகும். இவற்றை ‘பறக்கும் நரி’ என்றும், ‘பழ வவ்வால்’ என்றும் அழைப்பது உண்டு. தெற்கு பசிபிக் கடல் தீவுகளில் இந்த வகை வவ்வால்கள் வசிக்கின்றன. இவற்றின் சிறகு மட்டும் 6 அடி நீளம் இருக்கும்.

* உலகின் மிகச்சிறிய வவ்வால் இனம், ‘தேனீ வவ்வால்’ எனப்படுகிறது. விரல் அளவைவிட சிறியதாக,  உள்ள இவை சில கிராம் எடையே இருக்கும்.

* ரத்தக்காட்டேறி வவ்வால்களுக்கு அதன் மூக்கில் 3 விதமான வெப்ப உணர்வு உறுப்புகள் உள்ளன. தனக்குப் பிரியமான இரையின் ரத்தத்தை இந்த உணர் உறுப்புகளின் மூலம் எளிதாக அடையாளம் கண்டுகொள்கின்றன. இதன்காரணமாக எவ்வளவு கூட்டத்திற்கு மத்தியிலும் தனக்கு விருப்பமான சுவை கொண்ட ரத்தமுடைய உயிரினங்களை சரியாகத் தேடிப்பிடித்து தனது பசியைத் தீர்த்துக் கொள்கின்றன.

* வவ்வால்களும் குளிர் கால தூக்கத்தில் ஈடுபடும். பல வாரங்களை தூக்கத்தில் கழிக்கும். விழித்திருக்கும்போது நிமிடத்திற்கு  400 முறை துடிக்கும் இதன் இதயம், குளிர்கால உறக்கத்தில் இருக்கும்போது நிமிடத்திற்கு 25 முறையே துடிக்கிறது.

* வ்வால்கள் குறிப்பிட்ட பருவங்களில் பல நூறு கிலோமீட்டர்கள் முதல் ஆயிரக்கணக்கான கிலோ மீட்டர் தூரம் வரை இடப் பெயர்ச்சி செய்கின்றன. மெக்சிகோ நாட்டில் காணப்படும் வாலில்லா வவ்வால் இனம், அமெரிக்காவின் ஆஸ்டின் நகருக்கு குறிப்பிட்ட பருவ காலங்களில் படையெடுக்கின்றன. அந்தக் காலத்தில் காங்கிரஸ் அவெனியு பாலத்தின் அடியில் 15 லட்சம் வவ்வால்கள் குடி கொண்டிருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

* வவ்வால்களின் குணத்தை அடிப்படையாகக் கொண்டு ‘பேட்மேன்’ பாத்திரம் உருவாக்கப்பட்டு சினிமா படமாக வெளிவந்து வெற்றி பெற்றுள்ளது.

* பெரும்பாலான வவ்வால் இனங்கள் ஆண்டிற்கு ஒரு குட்டி மட்டுமே ஈனுகின்றன. தாய் வவ்வால்களுக்கு தங்கள் குட்டியை லட்சக்கணக்கான வவ்வால்களுக்கு மத்தியில் இருந்தாலும் அடையாளம் காண முடியும். தனிப்பட்ட ஓசை மற்றும் வாசனையின் அடிப்படையில் அது தனது குட்டியை இனம் கண்டுபிடித்துவிடுகிறது.

*வவ்வால்களின் எச்சங்கள் (கழிவு) குவானோ எனப்படுகிறது. இது உயர்தர உரமாகும். எனவே வவ்வால் எச்சத்தை சேகரித்து விற்பது ஒருசமயத்தில் பெரும் தொழிலாக இருந்துள்ளது. அமெரிக்காவின் டெக்சாஸ் மாகாணத்தில், எண்ணெய் வணிகத்தைவிட, வவ்வால் எச்ச வணிகம் அதிகமாக நடந்த காலம் உண்டு.

*வவ்வால் இனங்கள் தேனை விரும்பிச் சாப்பிடுவது உண்டு. இதனால் மலர்களில் இருந்து அதிக அளவில் மகரந்தச் சேர்க்கை நடைபெறவும் காரணமாகின்றன. பழம் தின்னி வவ்வால்கள், விதைகள் பரவலுக்கும் காரணமாக உள்ளன.

*மனிதர்களுடன்  வவ்வால் களுக்கு நேரடித் தொடர்பு இல்லா விட்டாலும், அவை பல்வேறு விதங் களில் மனித குலத்துக்கு நன்மை செய்கின்றன. ஆனால் மனிதனின் செயல்பாடுகளால்  வவ் வால்களின்  வாழ்விடங்கள் பாதிக்கப்படுவதால் வவ்வால்  இனங் கள் அழிவின் விளிம்புக்கு தள்ளப்பட்டுள்ளன. உலகில் பெரும்பாலான வவ்வால் இனங்கள் அழியும் நிலையிலேயே உள்ளன. வவ்வால் இனங்களைப் பாதுகாப்பது நமக்கு பெருமளவு நன்மை தரக்கூடியது என்பதால் அவற்றை காத்து பயன்பெறுவோம்!

வவ்வால்களால் ஒரு மணி நேரத்தில் 1200 கொசுக் களை உண்ண முடியும். வவ்வால்கள், ஒவ்வொரு நாளும் தனது உடல் எடைக்கு நிகரான உணவை உண்டு செரிக்கிறது. இவ்வளவு தீவிரமாக பூச்சிகளை சாப்பிடுவதால்தான் உலகில் பூச்சியினங்களின் அபரிமித பெருக்கம்  கட்டுப்படுத்தப்படுத்தப்படுகிறது. அதுமட்டுமல்லாமல் தாவரங்களை தாக்கும் பூச்சிகளை பெருமளவு உண்பதால், உலகம் முழுக்க விவசாயிகளுக்கு கோடிக்கணக்கான ரூபாயை மிச்சப்படுத்துகிறது. அமெரிக்காவில் மட்டும் விவசாயிகள் பூச்சிகளை கட்டுப்படுத்த ஆண்டுக்கு 3.7 பில்லியன் டாலர் தொகையை செலவிடுகிறார்கள். வவ்வால்கள் இல்லாவிட்டால் 50 பில்லியன் டாலர் தொகையை செலவு செய்தால்தான் இந்த பூச்சிகளை  கட்டுப்படுத்த முடியுமாம்!

Next Story