நிலையங்களில் வினியோகம் செய்யும் பெட்ரோல், டீசல் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்


நிலையங்களில் வினியோகம் செய்யும் பெட்ரோல், டீசல் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும்
x
தினத்தந்தி 4 Nov 2017 4:00 AM IST (Updated: 4 Nov 2017 12:43 AM IST)
t-max-icont-min-icon

பெட்ரோல் நிலையங்களில் வினியோகம் செய்யும் பெட்ரோல், டீசல் குறித்து புகார் செய்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரி கூறினார்.

வால்பாறை,

பொள்ளாச்சி தொழிலாளர்துறையின் துணை ஆய்வாளர் ராஜசேகரன் தலைமையில் அதிகாரிகள் வால்பாறை நகரில் உள்ள பெட்ரோல் நிலையங்களில் (பங்குகள்) திடீர் ஆய்வு நடத்தினர். அப்போது பொதுமக்களுக்கு வினியோகம் செய்யும் பெட்ரோல், டீசல் ஆகியவற்றின் அளவுகள் சரி பார்க்கப்பட்டன. பெட்ரோல் வழங்கும் எந்திரங்களில் குறிக்கப்படும் டிஜிட்டல் அளவும் வழங்கப்படும் அளவும் சரியாக உள்ளதா? என்பதுகுறித்து ஆய்வு செய்யப்பட்டது. பின்னர் எடை அளவுக்கான முத்திரைகள் பதிக்கப்பட்டன. இதே போல வால்பாறையில் பல்வேறு எஸ்டேட் பகுதிகளில் இயங்கிவரும் பெட்ரோல் பங்குகளிலும் அளவுகள் பரிசோதிக்கப்பட்டது. இது குறித்து தொழிலாளர்நல துணைஆய்வாளர் ராஜசேகரன் கூறியதாவது:–

பெட்ரோல் பங்குகளை பொறுத்தவரை வால்பாறை பகுதியில் குறைந்த எண்ணிக்கையில் தான் உள்ளன. எனவே அடிக்கடி பெட்ரோல் பங்குகளில் சோதனைகள் நடத்தப்படுகின்றன. முறைகேடுகள் நடக்காத வகையில் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. பெட்ரோல் பங்குகளில் ஆண்டுக்கு ஒரு முறை அளவீடு முத்திரைகள் சரிபார்க்கப்பட்டு புதிய முத்திரைகள் பதிக்கப்படும். ஆகவே இதில் காலதாமதம் இல்லாமல் பெட்ரோல் பங்கு உரிமையாளர்கள் பார்த்துக்கொள்ள வேண்டும்.பெட்ரோல் பங்குகள் மூலம் வாகனங்களுக்கு வினியோகம் செய்யும் பெட்ரோல், டீசல்களின் அளவுகள் குறித்து பொதுமக்கள் புகார் தெரிவித்தால் உடனுக்குடன் பெட்ரோல் பங்குகளில் சோதனைகள் நடத்தி நடவடிக்கை எடுக்கப்படும்

இவ்வாறு அவர் கூறினார்.


Next Story