20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா போராட்டம்


20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 4 Nov 2017 4:15 AM IST (Updated: 4 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

திண்டுக்கல்லில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி டாஸ்மாக் பணியாளர்கள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு அரசு டாஸ்மாக் பணியாளர் சங்கம் சார்பில் 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, திண்டுக்கல் மணிக்கூண்டு அருகே தர்ணா போராட்டம் நடந்தது. இதற்கு மாவட்ட தலைவர் சத்தியமூர்த்தி, அமைப்பு செயலாளர் விஜயகுமார் ஆகியோர் தலைமை தாங்கினர். மாவட்ட தலைமை நிலைய செயலாளர் ராமு, செயலாளர் கண்ணையன், பொருளாளர் கிருஷ்ணசாமி உள்பட நிர்வாகிகள் மற்றும் டாஸ்மாக் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

அப்போது தமிழக அரசின் கொள்கை முடிவின்படி டாஸ்மாக் மதுக்கடைகளை மூடும் போது வேலை இழக்கும் பணியாளர்களை பிற துறைகளில் காலியாக உள்ள பணியிடங்களில் நியமிக்க வேண்டும். அவ்வாறு பிற துறைகளில் பணி அமர்த்தும் போது டாஸ்மாக் நிறுவனத்தில் பணியாற்றிய காலத்தை கணக்கில் எடுத்துக் கொள்ள வேண்டும்.

மேலும் டாஸ்மாக் மதுக்கடைகளில் பணத்தை வைப்பதற்கு பாதுகாப்பு பெட்டகம், கண்காணிப்பு கேமரா, எச்சரிக்கை மணி போன்ற வசதிகளை செய்ய வேண்டும். மது விற்ற பணத்தை வழிப்பறி கொள்ளையர்கள் கொள்ளையடித்து சென்றால் தொகையை பணியாளர்களிடம் வசூலிப்பது மற்றும் தற்காலிக பணிநீக்கம் செய்வதை கைவிட வேண்டும்.

அதேபோல் மாநிலம் முழுவதும் உரிமம் பெறாமல் நடத்தப்படும் மதுபான கூடங்களால் அரசுக்கு ஏற்படும் இழப்பை தடுக்க வேண்டும். பல மாவட்டங்களில் உரிமம் பெற்ற மதுபான கூடங்களில் மதுபானம் விற்பனை செய்வதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பணி ஓய்வுபெறுபவர்களுக்கு பணிக்கொடையாக ரூ.5 லட்சம் வழங்க வேண்டும் என்பன உள்பட 20 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர்.


Next Story