மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: நம்பியாற்றில் இருந்து வெள்ளநீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்


மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பலத்த மழை: நம்பியாற்றில் இருந்து வெள்ளநீர் வீணாக கடலில் கலக்கும் அவலம்
x
தினத்தந்தி 4 Nov 2017 4:15 AM IST (Updated: 4 Nov 2017 1:16 AM IST)
t-max-icont-min-icon

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் போய் கலக்கிறது.

இட்டமொழி,

மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் பெய்து வரும் பலத்த மழை காரணமாக, நம்பியாற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வீணாக கடலில் போய் கலக்கிறது. எனவே நம்பியாற்றில் தடுப்பணைகள் கட்டி நீரை சேமிக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. நெல்லை மாவட்டத்திலும் பருவமழை பரவலாக பெய்து வருகிறது. இந்த மழை காரணமாக ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. அணைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது.

நெல்லை மாவட்டத்தில் பாய்ந்து ஓடும் முக்கிய ஆறுகளில் நம்பியாறும் ஒன்றாகும். இந்த ஆறு மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் மகேந்திரகிரி, களக்காடு பகுதிகளில் உற்பத்தியாகி, திருக்குறுங்குடி, ஏர்வாடி, சிறுவளஞ்சி, ராஜாக்கள்மங்களம், சித்தூர் பகுதி வழியாக ஓடி ஆத்தங்கரை பள்ளிவாசல் பகுதியில் உவரி கடலில் கலக்கிறது.

கடந்த சில நாட்களாக மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதிகளில் பலத்த மழை பெய்து வருவதால், நம்பியாற்றிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு உள்ளது. இதனால் அந்த ஆற்றில் தண்ணீர் கரைபுரண்டு ஓடி வருகிறது.

அவ்வாறு ஓடி வரும் தண்ணீரை தேக்கி வைக்க தடுப்பணைகள் இல்லாத காரணத்தால், வீணாக உவரி கடலில் கலக்கிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் கவலை அடைந்து உள்ளனர்.

கடந்த ஆண்டு பருவமழை பொய்த்து விட்டதால், நெல்லை மாவட்டத்தில் வரலாறு காணாத வறட்சி நிலவியது. இதனால் அணைகள், குளங்கள் வறண்டு போனது. நிலத்தடி நீர்மட்டம் குறைந்ததால் கிணறுகள், ஆழ்குழாய் கிணறுகள் தண்ணீர் இன்றி வறண்டன. பயிர்கள் கருகி விவசாயம் பாதிக்கப்பட்டது. கால்நடை தீவன பற்றாக்குறை ஏற்பட்டது.

மழை காலங்களில் தண்ணீரை நல்ல முறையில் நீர்நிலைகளில் தேக்கி வைத்தால், இதுபோன்ற வறட்சியான காலங்களை சமாளிக்க முடியும். தற்போது நம்பியாற்றில் வீணாக கடலில் சென்று கலக்கும் தண்ணீரை தடுப்பணைகள் கட்டி தேக்கி வைத்து, ராதாபுரம் பகுதியில் உள்ள குளங்களுக்கு திருப்பி விட்டால் விவசாயம் செழிக்கும். கோடை காலங்களில் குடிநீர் பிரச்சினை ஏற்படாது. எனவே நம்பியாற்றில் தடுப்பணைகள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

மேலும் தாமிரபரணி ஆறு, நம்பியாறு, கருமேனி ஆறு இணைப்பு திட்டமும் தமிழக அரசால் தொடங்கப்பட்டு கிடப்பில் போடப்பட்டு உள்ளது. அந்த திட்டத்தை நிறைவேற்றினாலும் பொதுமக்கள், விவசாயிகள் பயன் அடைவார்கள். எனவே அந்த திட்டத்தை விரைந்து செயல்படுத்தவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


Next Story