விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழை: திருவொற்றியூரில் 5 ஆயிரம் வீடுகளை தண்ணீர் சூழ்ந்தது
விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் திருவொற்றியூர் பகுதியில் 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை தண்ணீர் சூழ்ந்துள்ளது.
திருவொற்றியூர்,
திருவொற்றியூர், எண்ணூர், மணலி மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் விடிய, விடிய கொட்டித்தீர்த்த மழையால் திருவொற்றியூர் மேற்கு பகுதிகளான கலைஞர் நகர், ராஜாஜி நகர், சரஸ்வதி நகர், கலைவாணி நகர், ராஜாசண்முகம் நகர், ஜோதிநகர் உள்ளிட்ட 25 நகர்களை சேர்ந்த 5 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்துள்ளது.
திருவொற்றியூர், எண்ணூர் பகுதியில் இருந்து பைபர் படகு மற்றும் கட்டுமரங்களில் கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்கள் 4–வது நாளாக நேற்றும் மீன்பிடிக்க செல்லவில்லை.
மணலி எம்.ஜி.ஆர். நகர் உள்ளிட்ட பகுதிகளில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளுக்குள் மழைநீர் புகுந்தது. அந்த தண்ணீரை வெளியேற்றும் பணியில் பெண்கள் ஈடுபட்டனர். பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டது. மக்கள் வீட்டை விட்டு வெளியே வரவில்லை.
மணலி விரைவு சாலையில் முழங்கால் அளவு தண்ணீர் ஓடியதால் கனரக வாகனங்கள் ஊர்ந்து சென்றன. இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளை அமைச்சர் சி.வி.சண்முகம் நேரில் பார்வையிட்டார். அவர், கொசஸ்தலை ஆறுடன் மழைநீர் வெள்ளம் சேரும் இடங்களான இடையஞ்சாவடி, மணலி புதுநகர் மேம்பாலம் அருகே உள்ள வடிகால் பகுதி, மகாலட்சுமி நகர் பகுதியில் உள்ள உபரிநீர் கால்வாயில் ஏற்பட்டு உள்ள உடைப்பு, எம்.எப்.எல். ரவுண்டானா அருகே உள்ள புழல் உபரிநீர் கால்வாய், சடையங்குப்பம் மேம்பாலம் ஆகியவற்றை பார்வையிட்டார்.
அப்போது அமைச்சர் சி.வி.சண்முகம் நிருபர்களிடம் கூறும்போது, ‘‘மணலி மண்டலத்துக்கு உட்பட்ட பகுதிகளில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்படும் பகுதிகளை பார்வையிட்டு முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுத்து வருகிறோம். பொதுமக்களுக்கு தேவையான அனைத்து உதவிகளும் தயார் நிலையில் உள்ளது’’ என்றார்.
பின்னர் இருளர் குடியிருப்பு பகுதியில் நடந்த மருத்துவ முகாமை அவர் தொடங்கிவைத்தார். அவருடன் சிறுணியம் பலராமன் எம்.எல்.ஏ., பகுதி செயலாளர் கிருஷ்ணன் மற்றும் அதிகாரிகள் உடன் சென்றனர்.
திருவொற்றியூர் அம்பேத்கர் நகர்–மாணிக்கம் நகர் இணைப்பு ரெயில்வே சுரங்கப்பாதையில் மழைநீர் தேங்கி நிற்பதால் அந்த பகுதியில் போக்குவரத்து தடை செய்யப்பட்டது.
திருவொற்றியூர் கார்கில் நகரில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை திருவொற்றியூர் தி.மு.க. எம்.எல்.ஏ. கே.பி.பி.சாமி, வட்ட செயலாளர் ஆதிகுருசாமி ஆகியோர் பார்வையிட்டு பாதிக்கப்பட்ட மக்களுக்கு உணவு பொருட்களை வழங்கினர்.
மணலி ஆமுல்லைவாயல் பகுதியில் இருந்து அரியலூர் செல்லும் தரைப்பாலத்தில் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் செல்வதால் அந்த பகுதியில் போக்குவரத்து நிறுத்தப்பட்டு மாற்று வழியில் வாகனங்கள் திருப்பிவிடப்பட்டன.