சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடை குறைந்த புதிய சொகுசு பெட்டிகள் 8–ந் தேதி முதல் இணைக்கப்படுகின்
கோவையில் இருந்து சென்னை செல்லும் சேரன் எக்ஸ்பிரஸ் ரெயிலில் எடை குறைந்த புதிய சொகுசு பெட்டிகள் கோவை வந்தன. அவை வருகிற 8–ந் தேதி முதல் சேரன் எக்ஸ்பிரசில் இணைக்கப்படுகின்றன.
கோவை,
கோவையில் இருந்து சென்னைக்கு தினமும் இரவில் புறப்படும் சேரன் எக்ஸ்பிரஸ் புதிய ரெயில் பெட்டிகள் இணைக்கப்பட உள்ளன. இதற்காக முதல் கட்டமாக 10 தூங்கும் வசதி கொண்ட ரெயில் பெட்டிகள், குளிர்சாதன பெட்டிகள் 2 மற்றும் முன்பதிவில்லாத 3 ரெயில் பெட்டிகள் நேற்று கோவை வந்துள்ளன. இது தவிர இன்றும் (திங்கட்கிழமை), நாளையும் (திங்கட்கிழமை) மீதி ரெயில் பெட்டிகள் கோவை வர உள்ளன.
சிவப்பு நிற பெயிண்ட் அடிக்கப்பட்ட இந்த ரெயில் பெட்டிகள் அனைத்தும் கோவை ரெயில் நிலை யத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இவை வருகிற 8–ந் தேதி சேரன் எக்ஸ்பிரசில் இணைக்கப்பட உள்ளன. புதிய ரெயில் பெட்டிகளில் பல்வேறு நவீன தொழில்நுட்பத்தில் சொகுசு வசதிகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்கள் செய்யப்பட்டுள்ளன.
இது குறித்து ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறியதாவது:–
தற்போது உள்ள ரெயில் பெட்டிகளை விட இந்த ரெயில் பெட்டிகளில் நவீன பாதுகாப்பு அம்சங்கள் மற்றும் சொகுசு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இந்த ரயில் பெட்டிகள் உலகத்தரம் வாய்ந்தவை. அதிர்வுகளை ஏற்படுத்தாத அளவுக்கு சொகுசான பயணத்திற்கு வழி வகுக்கும் வகையில் பெட்டியின் கீழும், பக்கவாட்டிலும் ஸ்பிரிங்குகள் கூடுதலாக பொருத்தப்பட்டுள்ளன.
ரெயில் பெட்டிகளின் எடை குறைவாக இருப்பதற்கு காரணம் மற்ற பெட்டிகளில் விளக்குகள் மற்றும் மின்விசிறிகள் இயங்குவதற்கு அந்த பெட்டியின் அடியில் பேட்டரிகள் பொருத்தப்பட்டு இருக்கும். ஆனால் புதிய ரெயில் பெட்டியில் பேட்டரிகள் கிடையாது. பல கிலோ எடையுள்ள பேட்டரிகள் இல்லாததால் பெட்டியின் எடை குறைந்துள்ளன.
ஆனால் ரெயிலில் இணைக்கப்பட்டு உள்ள அனைத்து பெட்டியிலும் பொருத்தப்பட்டு உள்ள விளக்குகள், மின்விசிறிகள் இயங்குவதற்காக என்ஜினுக்கு அடுத்தும், கடைசி பெட்டிக்கு பின்புறமும் 2 ஜெனரேட்டர் பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. அந்த ரெயில் பெட்டிக்கு தேவையான மின்சாரம் இந்த ஜெனரேட்டர் பெட்டியில் இருந்து வினியோகம் செய்யப்படும்.
எடை குறைவாக இருப்பதால் ரெயில் வேகமாக செல்ல முடியும். அதிக எடையுள்ள பெட்டிகளை இழுத்து செல்வதற்கு பதில் எடை குறைவான ரெயில் பெட்டிகளை இழுத்து செல்வதால் டீசலும் மிச்சமாகும். எல்.எச்.பி என அழைக்கப்படும் இந்த ரெயில் பெட்டிகளில் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மற்றும் அலுமினியம் அதிகம் பயன்படுத்தப்பட்டு உள்ளதால் வழக்கமான ரெயில் பெட்டிகளை விட 15 சதவீதம் வரை எடை குறைவாக இருக்கும்.
மேலும் புதிய ரெயில் பெட்டியில் கூடுதல் இருக்கைகள் அமைக்கப்பட்டு உள்ளன. சென்னை ஐ.சி.எப் மற்றும் கபுர்தலா ரெயில் பெட்டி தொழிற்சாலைகளில் தயாரிக்கப்பட்டுள்ள இந்த பெட்டிகள் வழக்கமான ரெயில் பெட்டிகளை விட 1.7 மீட்டர் நீளமாக இருக்கும். மற்ற பெட்டிகளில் 72 படுக்கைகள் தான் இருக்கும். ஆனால் புதிய ரெயில் பெட்டியில் கூடுதலாக 8 படுக்கைகள் அமைக்கப்பட்டு ஒவ்வொரு பெட்டியின் படுக்கை வசதி 80 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது.
முதல் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 24 படுக்கைகளும், 2–ம் வகுப்பு குளிர்சாதன பெட்டியில் 52 படுக்கைகளும், சாதாரண வகுப்பு பெட்டியில் 100 இருக்கைகளும் இருக்கும். இந்த பெட்டிகளில் இரு முனைகளிலும் ஜெனரேட்டர்களுடன் கொண்ட பெட்டிகள் இருப்பதால் பெட்டிகளுக்கான இழுவை சக்தி வீணாவது குறையும்.
இதுதவிர, மைக்ரோ பிராசசர் என்ற உயர்சக்தியுடன் கூடிய குளிர்சாதன வசதி இருப்பதால் குளிர்காலம் மற்றும் கோடைகாலங்களுக்கு ஏற்ப பெட்டிகளுக்குள் வெப்பநிலை தானாக மாறிக் கொள்ளும்.
ஒவ்வொரு பெட்டியும் ரூ.2½ கோடி செலவில் தயாரிக்கப்பட்டு உள்ளன. இந்த புதிய பெட்டிகள் பொருத்தப்பட்ட ரெயிலை மணிக்கு 160 கிலோமீட்டர் வேகம் வரை இயக்க முடியும் என்பது குறிப்பிடத் தக்கது.
தற்போது தெற்கு ரெயில்வேயில் சென்னையில் இருந்து பாண்டியன், மலைக்கோட்டை, மங்களூரு அதிவிரைவு, திருவனந்தபுரம் மெயில் ஆகிய ரெயில்களில் இந்த பெட்டிகள் இணைக்கப்பட்டு உள்ளன. ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் பெருமளவில் இந்த ரெயில் பெட்டிகளில் பயன்படுத்தப்பட்டு இருப்பதால் விரைவில் துருபிடிக்காமல் நீண்டகாலத்திற்கு பெட்டிகள் உழைக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.
வேகமாக சென்று கொண்டிருக்கும் ரெயில் தடம் புரண்டால் என்ஜினுடன் இணைக்கப்பட்டுள்ள ரெயில் பெட்டிகள் ஒன்றுக்குள் ஒன்று புகுந்து பயங்கர உயிர் சேதத்தை விளைவிக்கும். இதற்கு காரணம் ரெயில் பெட்டிகளை இணைக்கும் இணைப்பு தொழில்நுட்பம் தான்.
ஆனால் சேரன் எக்ஸ்பிரசில் இணைக்கப்பட உள்ள புதிய ரெயில் பெட்டியின் இணைப்பில் புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்பட்டு உள்ளது. ரெயில் பெட்டிகள் தடம் புரண்டால் ஒரு பெட்டிக்குள் மற்றொரு பெட்டி உள்ளே நுழையாது. முன்புறம் உள்ள பெட்டி தடம் புரண்டால் பின்னால் வரும் பெட்டி வலதுபுறம் அல்லது இடதுபுறம் திரும்பி நின்று விடும். ஒரு பெட்டி மற்றொரு பெட்டிக்குள் செல்லாது. இதற்கு ஏற்றவாறு ஒரு பெட்டியுடன் மற்றொரு பெட்டியை இணைக்கும் இணைப்பு மாற்றப்பட்டு உள்ளதாக ரெயில்வே அதிகாரி ஒருவர் கூறினார்.