‘செட்டாப் பாக்ஸ்’ இல்லாதவர்களுக்கு அரசு கேபிள் இணைப்பில் 60 சேனல்கள் துண்டிப்பு ஆபரேட்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்


‘செட்டாப் பாக்ஸ்’ இல்லாதவர்களுக்கு அரசு கேபிள் இணைப்பில் 60 சேனல்கள் துண்டிப்பு ஆபரேட்டர்கள் உள்ளிருப்பு போராட்டம்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:15 AM IST (Updated: 5 Nov 2017 1:43 AM IST)
t-max-icont-min-icon

‘செட்டாப் பாக்ஸ்’ இல்லாதவர்களுக்கு அரசு கேபிள் இணைப்பில் 60 சேனல்கள் துண்டிக்கப்பட்டதால் திண்டுக்கல்லில் ஆபரேட்டர்கள் உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

திண்டுக்கல்,

தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தில் மாநிலம் முழுவதும் 62½ லட்சம் சந்தாதாரர்கள் உள்ளனர். இந்த நிலையில் அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் ஒளிபரப்பு சேவையை நவீனப்படுத்தும் வகையில் டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டது. மேலும் டி.வி. சேனல்கள் தெளிவாக தெரியும் வகையில் கேபிள் டி.வி. சந்தாதாரர்களுக்கு விலையில்லா ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கப்பட்டு வருகிறது.

இந்த ‘செட்டாப் பாக்ஸ்’களை பொருத்துவதற்கு கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ரூ.200 பெற்றுக்கொள்ளும்படி அரசு கேபிள் டி.வி. நிறுவனம் அறிவித்து இருக்கிறது. இதைத் தொடர்ந்து ‘செட்டாப் பாக்ஸ்’களை பொருத்தும் பணியில் கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் ஈடுபட்டுள்ளனர். அதன்படி திண்டுக்கல் மாவட்டத்திலும் பலருக்கு ‘செட்டாப் பாக்ஸ்’கள் பொருத்தப்பட்டு உள்ளன.

இதற்கிடையே ‘செட்டாப் பாக்ஸ்’ இல்லாத வீடுகளில் அரசு கேபிள் இணைப்பில் சில டி.வி. சேனல்கள் திடீரென துண்டிக்கப்பட்டு விட்டன. இதைத் தொடர்ந்து நேற்று ஏராளமான கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் திரண்டு, தமிழ்நாடு அரசு கேபிள் டி.வி. நிறுவனத்தின் திண்டுக்கல் கட்டுப்பாட்டு அலுவலகத்துக்கு வந்தனர்.

அங்கு அரசு கேபிள் இணைப்பில் துண்டிக்கப்பட்ட அனைத்து சேனல்களையும் மீண்டும் வழங்க வேண்டும் என்று கோரி முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் அலுவலகத்துக்குள் சென்று அமர்ந்தும் உள்ளிருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். மேலும் கோரிக்கையை வலியுறுத்தி கோ‌ஷமிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இதையடுத்து கேபிள் டி.வி. ஆபரேட்டர்களிடம், அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். அதன் பின்பு அவர்கள் கலைந்து சென்றனர்.

இதுபற்றி கேபிள் டி.வி. ஆபரேட்டர்கள் கூறுகையில், அரசு கேபிள் இணைப்பில் முன்பு 100 சேனல்கள் வழங்கப்பட்டன. டிஜிட்டல் தொழில்நுட்பத்துக்கு மாற்றப்பட்டதும் 30 சேனல்கள் துண்டிக்கப்பட்டன. இந்த நிலையில் மீண்டும் 30 சேனல்கள் துண்டிக்கப்பட்டுள்ளன. இதனால் ‘செட்டாப் பாக்ஸ்’ இல்லாத சந்தாதாரர்கள் சிரமத்துக்கு உள்ளாகின்றனர். எனவே, அனைவருக்கும் ‘செட்டாப் பாக்ஸ்’ வழங்கும் வரை, முன்பு போன்று அனைத்து சேனல்களையும் அரசு கேபிள் இணைப்பில் வழங்க வேண்டும், என்றனர்.


Next Story