நிதி நிறுவனத்தில் மோசடி: உரிமையாளரை கைது செய்ய கோரி காங்கிரசார் சாலை மறியல்


நிதி நிறுவனத்தில் மோசடி: உரிமையாளரை கைது செய்ய கோரி காங்கிரசார் சாலை மறியல்
x
தினத்தந்தி 5 Nov 2017 4:30 AM IST (Updated: 5 Nov 2017 3:08 AM IST)
t-max-icont-min-icon

களியக்காவிளை அருகே நிதி நிறுவனத்தில் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்ட சம்பவத்தில் உரிமையாளரை கைது செய்ய கோரி காங்கிரசார் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதுதொடர்பாக எம்.எல்.ஏ.க்கள் உள்பட 56 பேர் கைதாகி விடுதலை செய்யப்பட்டனர்.

களியக்காவிளை,

குமரி மாவட்டம் களியக்காவிளையை அடுத்த மத்தம்பாலையில் நிர்மல் கிருஷ்ணா என்ற தனியார் நிதி நிறுவனம் கடந்த 40 ஆண்டுகளாக செயல்பட்டு வந்தது. இந்த நிதி நிறுவனத்தில் குமரி மாவட்டம் மற்றும் கேரள மாநிலத்தை சேர்ந்த 10 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் வாடிக்கையாளர்களாக சேர்ந்து பணத்தை வைப்புத்தொகையாக செலுத்தி இருந்தனர்.

இந்தநிலையில் கடந்த ஓணம் பண்டிகையின் போது நிதி நிறுவனத்தை திடீரென பூட்டிவிட்டு, அதன் உரிமையாளர் நிர்மலன் குடும்பத்துடன் தலைமறைவானார். இதனால் பணத்தை செலுத்தி இருந்த வாடிக்கையாளர்கள் அதிர்ச்சி அடைந்தனர். அந்த நிதி நிறுவனத்தின் மூலம் பல கோடி ரூபாய் மோசடி செய்யப்பட்டிருப்பது தெரியவந்தது.

நிதி நிறுவன உரிமையாளர் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும், தாங்கள் செலுத்திய பணத்தை திரும்ப பெற்றுத்தர வேண்டும் என்று கேட்டு வாடிக்கையாளர்கள் பல்வேறு போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர்.

இதற்கிடையே அந்த நிதி நிறுவனத்தில் ரூ.17 லட்சத்தை செலுத்தி, பணம் திரும்ப கிடைக்காததால் மனவருத்தம் அடைந்த வாடிக்கையாளர் ஒருவர் தற்கொலை செய்து கொண்டார்.

இந்தநிலையில் நிதி நிறுவன மோசடி வழக்கை சி.பி.ஐ. விசாரிக்க வேண்டும். உரிமையாளரை கைது செய்து மோசடி பணத்தை மீட்டு தர வேண்டும் போன்ற கோரிக்கையை வலியுறுத்தி நேற்று குமரி மாவட்ட காங்கிரஸ் எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, பிரின்ஸ், ராஜேஷ் குமார் ஆகியோர் தலைமையில் கண்ணுமாமூடு பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில், பஞ்சாயத்துராஜ் மாவட்ட தலைவர் டாக்டர் சாமுவேல் ஜார்ஜ், விளவங்கோடு ஊராட்சி முன்னாள் தலைவர் ரவிசங்கர், பிஜு, ராஜா ஸ்டாலின், ஜோதிஷ்குமார் மற்றும் நிதி நிறுவனத்தில் பணம் செலுத்தி ஏமாற்றம் அடைந்த வாடிக்கையாளர்கள் பலர் கலந்து கொண்டனர்.

போராட்டத்தின் போது, நிதிநிறுவன உரிமையாளரை கைது செய்ய போலீசார் தகுந்த நடவடிக்கை எடுக்கவில்லை எனவும் குற்றம்சாட்டினர்.

அப்போது, போராட்டக்காரர்கள் திடீரென சாலையில் அமர்ந்து மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக சென்ற கேரள பஸ் உள்பட பல வாகனங்கள் சிறைபிடிக்கப்பட்டன.

இதுகுறித்த தகவல் அறிந்த களியக்காவிளை போலீசார் சம்பவ இடத்துக்கு சென்று போராட்டத்தில் ஈடுபட்ட எம்.எல்.ஏ.க்கள் விஜயதரணி, ராஜேஷ்குமார் உள்பட 56 பேரை கைது செய்து அருகில் உள்ள திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர். பிறகு மாலையில் விடுவிக்கப்பட்டனர். இந்த சம்பவத்தால் அந்த பகுதியில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story