குடியிருப்பை வெள்ளம் சூழ்ந்தது: 2 கர்ப்பிணி பெண்கள் பரிசல் மூலம் மீட்பு
மழை வெள்ளம் சூழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பில் வசித்த 2 கர்ப்பிணி பெண்கள் பரிசல் மூலம் மீட்கப்பட்டனர்.
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. சென்னை தாம்பரம் அருகே உள்ள வரதராஜபுரம் ஊராட்சிக்கு உட்பட்ட பரத்வாஜ் நகர், அஷ்டலட்சுமி நகர், பி.டி.சி. குடியிருப்பு பகுதி, கஜலட்சுமி நகர் உள்பட பல்வேறு பகுதிகளில் சாலைகளில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடியது.
அந்த பகுதியில் தரைத்தளத்தில் உள்ள வீடுகளில் வெள்ளம் புகுந்தது. இதனால் தரைத்தளத்தில் இருந்த பொதுமக்கள் தங்களது வீட்டை பூட்டி விட்டு உறவினர்களின் வீடுகளுக்கு சென்ற வண்ணம் இருக்கின்றனர்.
நேற்று காலை வரதராஜபுரம், கஜலட்சுமி நகர் பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பை சுற்றி அதிக அளவில் மழை வெள்ளம் சூழ்ந்ததை தொடர்ந்து அந்த குடியிருப்பில் வசித்து வந்த 2 கர்ப்பிணி பெண்கள் உள்பட பலர் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் உள்ளதாக காஞ்சீபுரம் மாவட்ட மழை வெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதாவுக்கு தகவல் கிடைத்துள்ளது.
இதையடுத்து சம்பவ இடத்திற்கு மழைவெள்ள தடுப்பு கண்காணிப்பு அலுவலர் அமுதா தலைமையில் ஸ்ரீபெரும்புதூர் தாசில்தார் ரமேஷ், மணிமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அசோகன் உள்ளிட்ட வருவாய்த்துறை அதிகாரிகள் கொண்ட மீட்பு குழுவினர் அங்கு விரைந்தனர்.
அவர்கள் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வந்த கர்ப்பிணி பெண்கள் காயத்திரி (வயது 31), சுகன்யா (27) மற்றும் அவர்களது குழந்தைகள், உறவினர்கள் ஆகியோரை பரிசல் மூலம் மீட்டனர்.
மீட்கப்பட்ட காயத்திரி, சுகன்யா ஆகியோருக்கு அங்கு தயார் நிலையில் இருந்த நடமாடும் மருத்துவக்குழுவினர் மருத்துவ பரிசோதனை செய்தனர். பின்னர் இருவரையும் சொந்த ஊருக்கு அதிகாரி அமுதா அனுப்பி வைத்தார்.