புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்த 539 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது


புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்த 539 மதுபாட்டில்கள் பறிமுதல் 2 பேர் கைது
x
தினத்தந்தி 5 Nov 2017 5:06 AM IST (Updated: 5 Nov 2017 5:06 AM IST)
t-max-icont-min-icon

புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு காரில் கடத்தி வந்த 539 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக காரில் வந்த 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

சேலம்,

சேலம் உடையாப்பட்டி அருகே குண்டுக்கல்புதூர் வேடியப்பன் கோவில் என்ற இடத்தில் நேற்று காலையில் அம்மாபேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் நாகராஜன் தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர் மாணிக்கம் மற்றும் போலீசார் வாகன தணிக்கையில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த புதுச்சேரி பதிவெண் கொண்ட ஒரு கார் மற்றும் மினி ஆட்டோவை நிறுத்தி சந்தேகத்தின்பேரில் போலீசார் சோதனை செய்தனர்.

அதில், கார் மற்றும் மினி ஆட்டோவில் 539 மதுபாட்டில்கள் இருப்பதும், அந்த பாட்டில்கள் புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு கடத்தி கொண்டுவரப்பட்டதும் தெரியவந்தது. இதன் மதிப்பு ரூ.2 லட்சத்து 16 ஆயிரம் இருக்கும் என கூறப்படுகிறது. இதனைத்தொடர்ந்து காரை ஓட்டி வந்த டிரைவர் மற்றும் மினி ஆட்டோவில் வந்த நபரை பிடித்து போலீசார் விசாரணை நடத்தினர்.

விசாரணையில், காரின் உரிமையாளரான சேலம் உடையாப்பட்டியை சேர்ந்த ராஜ முருகன் (வயது 44), அவருடன் வந்தவர், சேலம் மேட்டுத்தெருவை சேர்ந்த ரமேஷ் (38) என்பது தெரியவந்தது. இதையடுத்து அவர்கள் 2 பேரையும் போலீசார் கைது செய்தனர். பின்னர், புதுச்சேரியில் இருந்து சேலத்திற்கு கடத்தி வந்த 539 மதுபாட்டில்களையும் போலீசார் பறிமுதல் செய்தனர். மேலும், மதுபாட்டில்களை கடத்தி வந்த கார் மற்றும் மினி ஆட்டோவும் பறிமுதல் செய்யப்பட்டன.

இது தொடர்பாக அம்மாபேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த கடத்தலுக்கு வேறு யாரேனும் உடந்தையாக இருந்தார்களா? என்றும், சேலத்தில் எங்கு மறைத்து வைத்து விற்பனை செய்யப்படுகிறது? என்பது குறித்தும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Next Story