தொடர் மழை எதிரொலி: நீலகிரியில் கடுங்குளிரால் இயல்பு வாழ்க்கை பாதிப்பு
நீலகிரி மாவட்டத்தில் பெய்து வரும் தொடர் மழை காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டது.
ஊட்டி,
நீலகிரி மாவட்டம் மலை மாவட்டமாக உள்ளதால், சுற்றுலா தலங்கள் அதிகளவில் உள்ளன. குறிப்பாக ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா, தொட்டபெட்டா மலைசிகரம், கல்லட்டி நீர்வீழ்ச்சி, பைக்காரா படகு இல்லம், பைக்காரா நீர்வீழ்ச்சி, சூட்டிங்மட்டம், பைன்பாரஸ்ட் உள்ளிட்ட இயற்கை காட்சி நிறைந்த இடங்களை சுற்றுலா பயணிகள் கண்டு ரசித்து செல்கின்றனர்.
தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை கடந்த மாதம் 27–ந் தேதி தொடங்கியது. அதனை தொடர்ந்து மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது. நீலகிரி மாவட்டம் ஊட்டியில் கடந்த 2 நாட்களாக இரவு நேரங்களில் மழை பெய்தது.
இந்த நிலையில் நேற்று காலை 9 மணிக்கு சாரல் மழை பெய்ய தொடங்கியது. இந்த மழை விட்டு விட்டு பகல் 12 மணி வரை பெய்தது. மேலும் ஊட்டி நகரின் சுற்றுப்புற பகுதிகளான கேத்தி, முள்ளிக்கொரை, தலைகுந்தா உள்ளிட்ட பகுதிகளிலும் லேசான மழை பெய்தது.
இதனால் ஊட்டி நகரை சுற்றிலும் உள்ள மலைகளை மேகக்கூட்டங்கள் மோதி செல்வதை காண முடிந்தது. ஊட்டி எல்க்ஹில் பகுதியில் வீடுகளே தெரியாத அளவுக்கு பனிமூட்டம் சூழ்ந்து காணப்பட்டது. அதன் காரணமாக ஊட்டியில் கடுங்குளிர் நிலவியது. இதனால் ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா, படகு இல்லம், ரோஜா பூங்கா ஆகிய சுற்றுலா தலங்களை காண வந்த சுற்றுலா பயணிகள் அவதி அடைந்தனர்.
ஊட்டியில் சாரல் மழை பெய்ததால் சுற்றுலா பயணிகள் குடை பிடித்தப்படி சுற்றுலா தலங்களை கண்டு ரசித்தனர். ஊட்டி படகு இல்லத்துக்கு வந்த சுற்றுலா பயணிகள் கடுங்குளிரையும் பொருட்படுத்தாமல், துடுப்பு படகு, மோட்டார் படகு மற்றும் மிதி படகில் சவாரி செய்து மகிழ்ந்தனர். கடுங்குளிர் காரணமாக சுற்றுலா பயணிகள் குளிர் தாங்க முடியாமல் கம்பளிகளை அணிந்திருந்தனர். மழை மற்றும் கடுங்குளிரால் சுற்றுலா பயணிகள் அவதிப்பட்டனர்.
கோத்தகிரி மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு முதல் தொடர்ந்து பலத்த மழை பெய்தது. இதன் காரணமாக பல இடங்களில் ஆங்காங்கே மரங்கள் சாலைகளில் விழுந்து போக்குவரத்து பாதிக்கப்பட்டது. சில இடங்களில் லேசான மண் சரிவும் ஏற்பட்டது.
பலத்த மழை காரணமாக கோத்தகிரியில் இருந்து மேட்டுப்பாளையம் செல்லும் சாலையில் குஞ்சப்பனை சோதனை சாவடி அருகே சாலையில் நேற்று முன்தினம் இரவு 11 மணியளவில் மரம் விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் கோத்தகிரி போலீஸ் சப்– இன்ஸ்பெக்டர் கவுதம், தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ராமகிருஷ்ணன் ஆகியோர் தலைமையில் போலீசார் மற்றும் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டு மரத்தை அகற்றி போக்குவரத்தை சரிசெய்தனர்.
தொடர்ந்து பெய்து வரும் மழை மற்றும் கடும் பனி மூட்டம் காரணமாக கடுங்குளிர் நிலவுகிறது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டு உள்ளது. பனி மூட்டம் காரணமாக எதிரே வரும் நபர்கள் கூட தெரியாத அளவுக்கு கடும் பனி மூட்டம் இருந்தது. இதனால் வாகனங்கள் முகப்பு விளக்குகளை எரியவிட்டவாறு சென்றன.
விடுமுறை நாட்களில் கோத்தகிரி நகரில் பொருட்களை வாங்க வரும் பொதுமக்களின் கூட்டம் அதிகமாக இருக்கும். ஆனால் நேற்று மழை மற்றும் கடுங்குளிர் காரணமாக கோத்தகிரி நகர் பகுதியில் பொதுமக்கள் நடமாட்டம் ஏதுமின்றி வெறிச்சோடி காணப்பட்டது.
குன்னூர்– மேட்டுப்பாளையம் சாலையில் காட்டேரி பூங்கா அருகே சாலையின் குறுக்கே நேற்று முன்தினம் இரவு மரம் விழுந்தது. இதுபற்றி தகவல் அறிந்ததும் குன்னூர் தீயணைப்பு துறையினர் விரைந்து சென்று மின்வாள் கொண்டு மரத்தை வெட்டி அகற்றினர். சாலையில் மரம் விழுந்ததால் அந்த பகுதியில் சுமார் அரை மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
கொலக்கம்பையில் நேற்று முன்தினம் முதல் தொடர் மழை இருந்தது. மஞ்சூர் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளான எடக்காடு, தாய்சோலை, கோரக்குந்தா, இத்தலார், எமரால்டு காத்தாடி மட்டம், கூடலூர், பந்தலூர் பகுதிகளிலும் வானம் மேகமூட்டமாக காட்சி அளித்தது. நீலகிரி மாவட்டம் முழுவதும் கடுங்குளிர் நிலவுகிறது.