தொடர் மழையால் 60 கி.மீ. சாலைகள் சேதம் அதிகாரி தகவல்
தொடர் மழையால் கடலூர் மாவட்டம் முழுவதும் 60 கி.மீ. சாலைகள் சேதமடைந்துள்ளதாக நெடுஞ்சாலைத்துறை அதிகாரி தெரிவித்தார்.
கடலூர்,
கடலூர் மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கி பெய்து வருகிறது. இந்த மழையால் சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. இதனால் சாலைகளில் ஆங்காங்கே அரிப்பு ஏற்பட்டுள்ளது. ஜவான்பவன், கடலூர்– சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலை, கடலூர் பாரதிசாலை, இம்பீரியல் சாலை, நேதாஜி சாலை, சிதம்பரம் சி.முட்லூர் சாலை உள்பட பல்வேறு சாலைகளில் ஜல்லிகள் பெயர்ந்து பெரிய, பெரிய பள்ளங்களாக காட்சி அளித்து வருகிறது.
தேசிய, மாநில நெடுஞ்சாலைகளில் பல இடங்கள் குண்டும், குழியுமாக பல்லாங்குழி சாலையாக உள்ளது. அவற்றில் வாகன ஓட்டிகள் மிகுந்த சிரமத்துடன் சென்று வருகின்றனர். இதையடுத்து இந்த சாலைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை வைத்தனர்.
அதன்படி பள்ளமாக உள்ள சாலைகளில் தற்காலிகமாக, உடைந்த செங்கற்களை கொட்டி சீரமைத்து வருகின்றனர். ஆனால் அவை போட்ட சில மணி நேரத்துக்குள் வெளியேறி மீண்டும் அந்த இடம் பள்ளமாக காட்சி அளித்து வருகிறது. பருவ மழை ஓய்ந்த பிறகே சேதமடைந்த சாலைகள் நிரந்தரமாக சீரமைக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.
இது பற்றி மாநில நெடுஞ்சாலைத்துறை கோட்ட பொறியாளர் ரமேஷ்கண்ணா கூறுகையில், கடலூர் மாவட்டம் முழுவதும் மொத்தம் 1,850 கி.மீ. மாநில நெடுஞ்சாலைகள் உள்ளன. இந்த சாலைகளில் 50 கி.மீ. தூரமுள்ள சாலைகள் தற்போது பெய்து வரும் கன மழையால் சேதமடைந்துள்ளதாக முதல் கட்ட ஆய்வில் தெரிய வந்துள்ளது. சிதம்பரம் சி.முட்லூர் நெடுஞ்சாலையில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. அதில் 2 ஆயிரம் மணல் மூட்டைகளை அடுக்கி தற்காலிகமாக சீரமைத்து வருகிறோம்.
இது தவிர சாலைகளில் பள்ளமாக இருக்கும் இடத்தில் உடைந்த செங்கற்களை போட்டு சரி செய்து வருகிறோம். இன்னும் மழை பெய்ய இருப்பதால் சேதம் இன்னும் அதிகரிக்க வாய்ப்பு உள்ளது. மழை ஓய்ந்த பிறகே சேதமடைந்த சாலைகள் நிரந்தரமாக சீரமைக்கப்படும் என்றார்.
தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், கடலூர் – சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் 10 கி.மீ. தூரமுள்ள சாலைகள் மழையால் சேதமடைந்துள்ளதாக கணக்கெடுத்து உள்ளோம். சேதமடைந்த இடங்களை தற்காலிகமாக சீரமைத்து வருகிறோம் என்றார். இந்த தொடர் மழைக்கு இது வரை மாவட்டம் முழுவதும் தேசிய மற்றும் மாநில நெடுஞ்சாலைகள் 60 கி.மீ. அளவுக்கு சேதமடைந்துள்ளது.