கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தட்டாஞ்சாவடி செந்தில் கைது


கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தட்டாஞ்சாவடி செந்தில் கைது
x
தினத்தந்தி 6 Nov 2017 4:45 AM IST (Updated: 6 Nov 2017 2:30 AM IST)
t-max-icont-min-icon

கொலை வழக்கில் தலைமறைவாக இருந்த பிரபல ரவுடி தட்டாஞ்சாவடி செந்தில் நேற்று இரவு மதுரையில் கைது செய்யப்பட்டார்.

புதுச்சேரி,

புதுவை லாஸ்பேட்டை செல்லபெருமாள்பேட்டையை சேர்ந்தவர் முரளி (30). மடுவுப்பேட்டையை சேர்ந்தவர் சுந்தர் (30). பிரபல ரவுடிகள். நண்பர்களாக இருந்த அவர்களுக்குள் கருத்து வேறுபாடு ஏற்பட்டதால் இருவரும் பிரிந்தனர்.கடந்த சில மாதங்களுக்கு முன் தகராறு ஏற்பட்டது. இதனால் இருகோஷ்டியாக செயல்பட்டனர். சமாதான பேச்சு வார்த்தைக்காக கடந்த பிப்ரவரி மாதம் 18–ந் தேதி முரளியை வழுதாவூர் சாலையில் காலி மனைக்கு சுந்தர் அழைத்தார்.

அங்கு தட்டாஞ்சாவடியை சேர்ந்த பிரபல ரவுடியான செந்தில் முன்னிலையில் நடந்த பேச்சு வார்த்தையில் முரளியை, சுந்தரும் அவருடன் வந்த கூட்டாளிகளும் சரமாரி அரிவாளால் வெட்டி கொலை செய்தனர். இந்த வழக்கில் சுந்தர், அமரன் உள்பட 12 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வழக்கில் சம்பந்தப்பட்ட தட்டாஞ்சாவடி செந்தில் தொடர்ந்து தலைமறைவாகி வந்தார்.

இந்த கொலை வழக்கு விசாரணை புதுவை நீதிமன்றத்தில் நடந்தது. இந்த வழக்கில் தட்டாஞ்சாவடி செந்தில் ஆஜராகாததால் அவரை பிரகடனப்படுத்தப்பட்ட குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். மேலும் அவரின் அசையும் மற்றும் அசையா சொத்துக்களையும், வங்கி கணக்குகளையும் முடக்கவும் உத்தரவிடப்பட்டது.

இதற்கிடையே சென்னை உயர்நீதிமன்றம் செந்திலை உடனடியாக புதுவை நீதிமன்றத்தில் சரணடையும்படி உத்தரவு பிறப்பித்தது. மேலும் அவரை பற்றிய தகவல் தெரிவிப்பவர்களுக்கு தகுந்த சன்மானம் வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் புதுவை மாவட்ட கலெக்டர் சத்தியேந்திரசிங் துர்சாவத் செந்திலின் அசையும், அசையா சொத்துக்களை முடக்க மாநில வருவாய்த்துறை ஆணையருக்கு உத்தரவு பிறப்பித்தார். மேலும் அவருடைய வங்கி கணக்குகளை முடக்கவும் வங்கி மேலாளருக்கு ஆணை பிறப்பித்துள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில மாதங்களாக தலைமறைவாக இருந்த தட்டாஞ்சாவடி செந்தில் மதுரையில் பதுங்கி இருப்பதாக போலீசுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.இதை தொடர்ந்து புதுவை போலீசார் மதுரைக்கு விரைந்தனர். அங்கு செந்திலை மதுரை போலீசாரின் உதவியுடன் புதுவை போலீசார் கைது செய்தனர்.


Next Story