டெங்கு கொசுப்புழு உற்பத்தி: வீடு, பஞ்சர் கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்


டெங்கு கொசுப்புழு உற்பத்தி: வீடு, பஞ்சர் கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:30 AM IST (Updated: 6 Nov 2017 2:39 AM IST)
t-max-icont-min-icon

காட்பாடி விருதம்பட்டில் நேற்று கலெக்டர் ராமன் டெங்கு ஒழிப்பு குறித்து ஆய்வு செய்தார். அப்போது டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகியிருந்த வீடு மற்றும் பஞ்சர்கடை உரிமையாளர்களுக்கு ரூ.15 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி முதலாவது மண்டலத்துக்கு உட்பட்ட விருதம்பட்டு பகுதியில் கலெக்டர் ராமன் நேற்று காலை டெங்கு ஒழிப்பு பணிகள் குறித்து ஆய்வு செய்தார். அங்குள்ள ஒரு சினிமா தியேட்டரில் ஆய்வு செய்த அவர் பின்னர் அதன் எதிரில் உள்ள பஞ்சர் கடைக்கு சென்று அங்குவைக்கப்பட்டிருந்த பழைய டயர்களில் தண்ணீர் தேங்கி உள்ளதா? என்று பார்வையிட்டார்.

அப்போது டயர்களில் மழைநீர் தேங்கியிருந்ததை பார்த்த அவர், கடையின் உரிமையாளருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதித்து, உடனடியாக தண்ணீரை அப்புறப்படுத்த உத்தரவிட்டார். மேலும் அங்குள்ள குடிநீர் தொட்டியில் குளோரின் சரியாக கலந்து குடிநீர் வழங்கப்படுகிறதா? என்று ஆய்வு செய்து, முறையாக குளோரின் கலந்து குடிநீர் வினியோகம் செய்ய உத்தரவிட்டார்.

அதேபகுதியில் உள்ள வீட்டு வளாகத்தை ஆய்வு செய்தபோது பயன்பாட்டில் இல்லாத தண்ணீர் தொட்டிகளில் டெங்கு கொசுப்புழுக்கள் மற்றும் குப்பைகள் இருப்பதை பார்த்து அதன் உரிமையாளருக்கு ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்ததுடன், அந்த வளாகத்தை சுத்தம் செய்து, அதற்காகும் செலவையும் அதன் உரிமையாளரிடம் வசூல் செய்ய சுகாதார அலுவலர்களுக்கு உத்தரவிட்டார்.

பின்னர் கடந்த 2 மாதங்களாக அந்தப்பகுதியில் காய்ச்சலால் பாதிக்கப்பட்டவர்கள் குறித்த அறிக்கையை பார்வையிட்டு கேட்டறிந்தார். அப்போது களப்பணியாளர்கள் ஆய்வு செய்யும்போது பயன்பாட்டில் இல்லாத வீடுகள், பழைய சாமான்கள் சேகரிக்கும் கடைகள், வாகனங்கள் பழுதுபார்க்கும் நிலையங்கள், பஞ்சர் கடைகளை கண்டறிந்து ஆய்வு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என மாநகராட்சி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

ஆய்வின்போது மாநகராட்சி முதலாவது மண்டல உதவி கமிஷனர் மதிவாணன், சுகாதார அலுவலர் மணிவண்ணன், காட்பாடி தாசில்தார் பாஸ்கரன் மற்றும் சுகாதார பணியாளர்கள் உடனிருந்தனர்.


Related Tags :
Next Story