மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் கோரிக்கை


மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் கோரிக்கை
x
தினத்தந்தி 6 Nov 2017 4:00 AM IST (Updated: 6 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும் என முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழக கூட்டத்தில் கோரிக்கை விடுக்கப்பட்டது.

புதுக்கோட்டை,

தமிழ்நாடு மேல்நிலைப்பள்ளி முதுநிலை பட்டதாரி ஆசிரியர் கழகத்தின் புதுக்கோட்டை மாவட்ட பொதுக் குழு கூட்டம் புதுக்கோட்டையில் உள்ள பிரகதாம்பாள் அரசு மேல்நிலைப்பள்ளியில் நேற்று நடைபெற்றது. கழகத்தின் மாநில தலைவர் மணிவாசகன் தலைமை தாங்கினார். கூட்டத்தில் தஞ்சாவூர் மாவட்ட தலைவரும், தேர்தல் அலுவலருமான குமார் கலந்து கொண்டு புதிய பொறுப்பாளர்களை தேர்வு செய்து, நியமனம் செய்து வைத்தார்.

தொடர்ந்து மேல்நிலைப்பள்ளி தலைமை ஆசிரியராக பதவி உயர்வு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கும், பணி நிறைவு பெற்ற முதுகலை ஆசிரியர்களுக்கும் பாராட்டு விழா நடைபெற்றது.

அதன தொடர்ந்து கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் பின்வருமாறு:-

முதுகலை ஆசிரியருக்கு 7-வது ஊதியக்குழுவில் ஏற்பட்ட முரண்பாடுகளை களைந்து, 8-வது ஊதியக்குழுவினை அமைக்க வேண்டும். தன் பங்களிப்பு ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்ய வேண்டும். ஓய்வூதிய திட்டத்தினை ரத்து செய்திட வேண்டும். 2004-06 தொகுப்பூதியத்தில் பணியேற்ற முதுகலை ஆசிரியர்களுக்கு பணியேற்ற நாள் முதல் பணிவரன்முறை செய்ய வேண்டும், மேல்நிலை கல்விக்கு தனி இயக்குனரகம் அமைக்க வேண்டும்.

தேர்வுபணி மதிப்பீடு பணிக்கான உழைப்பூதியத்தை உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டும், அரசாணை செயல்படாமல் உள்ளது. அதனை உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும். மேலும் புதிய ஊதியக்குழுவிற்கு ஏற்ப உழைப்பூதியம் உயர்த்தப்பட வேண்டும். பிளஸ்-1 செய்முறை தேர்வை அந்தந்த கல்வியாண்டே நடத்த வேண்டும். என்.என்.எஸ் திட்ட அலுவலர்களுக்கு 7 நாள் சிறப்பு தற்செயல் விடுப்பு வழங்க வேண்டும். மாணவர்களின் நலன்கருதி முதுகலை ஆசிரியர்களின் நேரடி நியமனத்தைப்போல பதவி உயர்விலும், ஒரே முதன்மை பாடத்தில் இளங் கலை மற்றும் முதுகலை பட்டம் பெற்றிருக்க வேண்டும்.

கிராஸ் மேஜரில் முதுகலை பட்டம் பெற்றவர்களுக்கு பதவி உயர்வு வழங்க கூடாது. தற்போது பதவி உயர்வு பெற்றவர்கள் 3 ஆண்டுகளுக்குள் இளங்கலை பட்டம் முடிக்க வேண்டும் என்பன உள்பட பல்வேறு தீர்மானங்கள் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்டன. இதில் மாவட்ட செயலாளர் தாமரைச்செல்வன் உள்பட பலர் கலந்து கொண்டனர். முன்னமாக மாவட்ட தலைவர் செல்வம் வரவேற்றார். முடிவில் முன்னாள் அமைப்பு செயலாளர் கோவிந்தன் நன்றி கூறினார்.


Related Tags :
Next Story