மழைநீரில் அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல்


மழைநீரில் அழுகிய நெற்பயிர்களுடன் விவசாயிகள் சாலை மறியல்
x
தினத்தந்தி 6 Nov 2017 4:15 AM IST (Updated: 6 Nov 2017 2:43 AM IST)
t-max-icont-min-icon

சீர்காழி அருகே மழைநீரில் அழுகிய நெற்பயிர்களுடன் பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்டித்து விவசாயிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

சீர்காழி,

நாகை மாவட்டம், சீர்காழி பகுதியில் கடந்த 7 நாட்களாக தொடர்ந்து பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் எடமணல், ஆமப்பள்ளம், வருசைப்பத்து, திருமுல்லைவாசல், வடகால், கடவாசல் உள்ளிட்ட பகுதிகளில் உள்ள வயல்களில் பயிரிடப்பட்ட நெற்பயிர்கள் மழைநீரில் மூழ்கின. மேலும் தாழ்வான பகுதிகளில் உள்ள குடியிருப்புகள், அரசு பள்ளி ஆகியவற்றில் மழைநீர் தேங்கி உள்ளது. இதனால் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது.

சாலை மறியல்

இந்நிலையில் நேற்று வயல்களில் தேங்கிய மழைநீர் வடியாததால் ஆத்திரம் அடைந்த விவசாயிகள் 50-க்கும் மேற்பட்டோர் மழைநீரில் அழுகிய நெற்பயிர்களை கையில் வைத்து கொண்டு சீர்காழி அருகே எடமணல் கிராமத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர். அப்போது எடமணல், திருமுல்லைவாசல், கடவாசல், வடகால் ஆகிய பகுதிகளில் உள்ள பாசன மற்றும் வடிகால் வாய்க்கால்களை தூர்வாராத பொதுப்பணித் துறை அதிகாரிகளை கண்டித்தும், வயல்களில் தேங்கிய மழைநீரை உடனே அகற்ற வலியுறுத்தியும் கோஷங்கள் எழுப்பினர். அப்போது பலத்த மழை பெய்ததாலும், பேச்சுவார்த்தைக்கு அதிகாரிகள் யாரும் வராததாலும் விவசாயிகள் கலைந்து சென்றனர். இந்த சாலை மறியலால் திருமுல்லைவாசல்-சீர்காழி சாலையில் 30 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story