போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை திட்டிய உதவி சப்–இன்ஸ்பெக்டர்–ஏட்டு பணி இடைநீக்கம்


போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை திட்டிய உதவி சப்–இன்ஸ்பெக்டர்–ஏட்டு பணி இடைநீக்கம்
x
தினத்தந்தி 6 Nov 2017 3:40 AM IST (Updated: 6 Nov 2017 3:40 AM IST)
t-max-icont-min-icon

பெங்களூருவில், பணியில் அலட்சியமாக செயல்பட்டதோடு, போலீஸ் சப்–இன்ஸ்பெக்டரை அவதூறாக திட்டிய உதவி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் மற்றும் ஏட்டு ஆகியோரை பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமி‌ஷனர் உத்தரவிட்டார்.

பெங்களூரு,

பெங்களூரு மகாதேவபுரா போலீஸ் நிலையத்தில் சப்–இன்ஸ்பெக்டராக பணியாற்றி வருபவர் அஸ்வத். உதவி சப்–இன்ஸ்பெக்டராக இருப்பவர் அம்ருதேஷ். ஏட்டுவாக இருப்பவர் ஜெயகிரண். இந்த நிலையில், ஏ.நாராயணபுராவில் உள்ள சூதாட்ட விடுதி மீது உதவி சப்–இன்ஸ்பெக்டர் அம்ருதேஷ் தலைமையில், ஏட்டு ஜெயகிரண் மற்றும் போலீசார் சோதனை நடத்தினர்.

அப்போது, சூதாட்டத்தில் ஈடுபட்டதாக 10 பேரை பிடித்து போலீசார் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து சென்றனர். இவர்களிடம் இருந்து ரூ.42 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டது. இதற்கிடையே, 10 பேர் மீதும் வழக்குகள் பதிவு செய்யாமல் சிறிது நேரத்தில் அவர்கள் விடுவிக்கப்பட்டனர். அத்துடன், விசாரணைக்கு ஆஜராக வேண்டி அவர்களுக்கு எந்த நோட்டீசும் அனுப்பவில்லை என தெரிகிறது.

இதுகுறித்து அறிந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அஸ்வத், உதவி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அம்ருதேஷ், ஏட்டு ஜெயகிரண் ஆகியோரிடம் விசாரித்தார். அப்போது அம்ருதேஷ், ஜெயகிரண் ஆகியோர் அஸ்வத் கேள்விக்கு சரியாக பதில் அளிக்காமல் அவரை அவதூறாக திட்டியுள்ளதாக கூறப்படுகிறது. மேலும், அவர்கள் 2 பேரும் சேர்ந்து அஸ்வத்தை தாக்க முயன்றதாகவும் சொல்லப்படுகிறது.

இதனால், அதிர்ச்சி அடைந்த போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அஸ்வத் சம்பவம் குறித்து போலீஸ் நிலைய குறிப்பேட்டில் எழுதினார். மேலும், ஒயிட்பீல்டு துணை போலீஸ் கமி‌ஷனர் அப்துல் அகாத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. முதற்கட்டமாக அவர் நடத்திய விசாரணையில், உதவி போலீஸ் சப்–இன்ஸ்பெக்டர் அம்ருதேஷ், ஏட்டு ஜெயகிரண் ஆகியோர் பணியில் அலட்சியமாக செயல்பட்டது தெரியவந்தது. இதையடுத்து, அவர்கள் 2 பேரையும் பணி இடைநீக்கம் செய்து துணை போலீஸ் கமி‌ஷனர் அப்துல் அகாத் நேற்று உத்தரவிட்டார். மேலும், அவர்களிடம் துறை ரீதியான விசாரணை நடத்தப்படும் எனவும் அவர் தெரிவித்தார்.


Next Story