பலத்த மழையால் சுருட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றம்
பலத்த மழை காரணமாக சுருட்டப்பள்ளி தடுப்பணையில் இருந்து கூடுதல் தண்ணீர் வெளியேற்றப்படுகிறது.
ஊத்துக்கோட்டை,
ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் பிச்சாட்டூரில் ஆரணியாறு அணை உள்ளது. இந்த அணை முழுவதுமாக நிரம்பினால் உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இப்படி திறந்து விடும் தண்ணீர் நாகலாபுரம், சுப்பாநாயுடுகண்டிகை, அச்சமநாயுடுகண்டிகை, சுருட்டப்பள்ளி, ஊத்துக்கோட்டை, பெரியபாளையம், ஆரணி, பொன்னேரி வழியாக பாய்ந்து பழவேற்காடு பகுதியில் வங்கக்கடலில் கலக்கிறது.
இப்படி தண்ணீர் வீணாக கடலில் கலப்பதை தவிர்த்து நிலத்தடி நீர் மட்டம் உயர, விவசாயிகள் பயன்பெறும் வகையில் ஆங்கிலேயர்கள் 1937–ம் ஆண்டு ஊத்துக்கோட்டை அருகே உள்ள சுருட்டப்பள்ளியில் ஆரணி ஆற்றின் குறுக்கே தடுப்பணை கட்டினர்.
இதில் 10 அடி தண்ணீரை சேமித்து வைக்கலாம். 5 அடி தண்ணீர் எப்போதும் இருப்பு இருக்கும். உபரி நீரை ஆரணி ஆற்றில் திறந்து விடுவது வழக்கம். இந்த நிலையில் கடந்த 10 நாட்களாக பிச்சாட்டூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில் பலத்த மழை பெய்து வருகிறது. எனினும் பிச்சாட்டூர் அணை இன்னும் முழுமையாக நிரம்ப வில்லை. பிச்சாட்டூர் அருகே உள்ள காடுகளில் உள்ள ஓடைகளில் இருந்து வரும் தண்ணீர் தற்போது ஆரணி ஆற்றில் பாய்கிறது. இதனால் சுருட்டப்பள்ளியில் உள்ள தடுப்பணை முழுமையாக நிரம்பி உள்ளது.
கடந்த ஒரு வாரமாக வினாடிக்கு 500 கனஅடி வீதம் திறந்து விடப்பட்ட தண்ணீர் நேற்று காலை முதல் வினாடிக்கு 2 ஆயிரம் கனஅடியாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.