கந்துவட்டி கேட்டு ரூ.78 ஆயிரம் கடன் தொகைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடம் அபகரிப்பு, கலெக்டரிடம் புகார்


கந்துவட்டி கேட்டு ரூ.78 ஆயிரம் கடன் தொகைக்கு ரூ.10 லட்சம் மதிப்புள்ள இடம் அபகரிப்பு, கலெக்டரிடம் புகார்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 12:47 AM IST)
t-max-icont-min-icon

ரூ.78 ஆயிரம் கடன் வாங்கியதற்கு கந்துவட்டி கேட்டு ரூ.10 லட்சம் மதிப்புள்ள வீடு மற்றும் இடத்தை அபகரித்து கொண்டதாக கலெக்டரிடம் புகார் கொடுக்கப்பட்டுள்ளது.

விருதுநகர்,

ராஜபாளையம் சோலைச்சேரியை சேர்ந்த ஜெயக்குமார் (வயது 44) என்பவர் கலெக்டரிடம் கொடுத்துள்ள புகார் மனுவில் கூறியிருப்பதாவது:–

நான் கூலி வேலை செய்து வருகிறேன். எனக்கு மனைவி மற்றும் 3 குழந்தைகள் உள்ளனர். எனது மகனின் வைத்திய செலவுக்காக ராஜபாளையம் குமரன் தெருவில் வசிக்கும் நடராஜன் என்பவரிடம் கடந்த 12.2.2010 அன்று ரூ.78 ஆயிரம் கடன் பெற்று இருந்தேன். ஒரு மாதம் கழித்து அவர் ரூ.1 லட்சம் கேட்டு என்னை மிரட்டி எனக்கு சொந்தமான வீட்டு மனை மற்றும் வீடு சேர்த்து தனக்கு எழுதி தருமாறும் வட்டியும், முதலும் செலுத்தும்போது திரும்பி எழுதி கொடுத்துவிடுவதாக கூறி என்னை வலுக்கட்டாயமாக அழைத்து சென்று துன்புறுத்தி கையெழுத்து வாங்கினார்கள்.

அதன்பின்னர் அன்றிலிருந்து இதுவரை ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் அவரிடம் பலரை சாட்சியாக வைத்து செலுத்தி உள்ளேன். ஆனால் அவர் மேலும் ரூ.1 லட்சம் கொடுத்தால் தான் எனது வீட்டு மனையை திருப்பி எழுதி தருவதாக கூறுவதோடு, என்னை வீட்டு விட்டு காலி செய்யும்படியும் மிரட்டி வருகின்றனர். இது குறித்து ராஜபாளையம் துணை போலீஸ் சூப்பிரண்டிடம் கடந்த மே மாதம் புகார் கொடுத்துள்ளேன். நான் வாங்கிய ரூ.78 ஆயிரம் கடனுக்கு இதுவரை ரூ.2 லட்சத்து 99 ஆயிரம் திருப்பி செலுத்திவிட்ட நிலையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள எனது இடம் மற்றும் வீடு ஆகியவற்றை அபகரித்து கொள்ளும் எண்ணத்துடன் என் மீது உண்மைக்கு புறம்பாக வழக்கு தொடர்ந்துள்ளனர்.

எனக்கு வேறு இடமோ, வீடோ கிடையாது. எங்களை வெளியேற்றினால் நாங்கள் குடும்பத்துடன் 5 பேரும் தற்கொலை செய்து கொள்வதை தவிர வேறு வழியில்லை. என்னை போன்று பலரும் நடராஜன் பெயரில் வீட்டு மனைகளை கடனுக்காக நம்பிக்கையின் அடிப்படையில் கிரயம் செய்து கொடுத்துள்ளார்கள். அவர்களையும் கந்துவட்டி கேட்டு மிரட்டி வருகின்றனர். ஆகவே இதுபற்றி விசாரணை செய்து எனது வீட்டினை மீட்டு தர நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு அந்த மனுவில் கூறப்பட்டுள்ளது.


Next Story