சீட்டு பணத்தை மோசடி செய்ய முயற்சி: தனியார் நிதி நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் முற்றுகை
திண்டுக்கல்லில் சீட்டு பணத்தை மோசடி செய்ய தனியார் நிதி நிறுவனம் முயற்சி செய்வதாக குற்றம்சாட்டிய வாடிக்கையாளர்கள், அந்த நிறுவனத்தை முற்றுகையிட்டனர்.
திண்டுக்கல்,
திண்டுக்கல்லில், திருச்சி சாலையில் ஒரு தனியார் நிதி நிறுவனம் செயல்பட்டு வருகிறது. சென்னையை தலைமையிடமாக கொண்டுள்ள அந்த நிறுவனத்தின் கிளைகள் தமிழகம் முழுவதும் 100–க்கும் அதிகமான இடங்களில் நிறுவப்பட்டுள்ளன. திண்டுக்கல்லில் உள்ள நிறுவனத்தில் ஏராளமானோர் சீட்டு போட்டு இருந்தனர். மாதாந்தோறும் ரூ.500 முதல் ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் வரை செலுத்தும் வகையில் 9 வகையான சீட்டு நடத்தப்பட்டது. இந்த தொகையை வாடிக்கையாளர்களின் வீடுகளுக்கு சென்று நிறுவனத்தின் பிரதிநிதிகள் வசூலிப்பது வழக்கம்.
சமீப காலமாக வீடுகளுக்கு வந்து பணத்தை வசூலிக்கவில்லை என்றும், முதிர்வு தொகையை கொடுக்கவில்லை என்றும் அந்த நிறுவனத்தின் மீது குற்றச்சாட்டு எழுந்தது. இந்த நிலையில், அந்த நிறுவனத்தில் சீட்டு போட்டு இருந்த வாடிக்கையாளர்கள் பலரும், திண்டுக்கல்லில் உள்ள அலுவலகத்துக்கு வந்தனர். அவர்கள் அலுவலகத்தின் உள்ளே நுழைந்து முற்றுகையிட்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
இது குறித்து வாடிக்கையாளர்கள் சிலர் கூறும்போது, ‘நிறுவனத்தின் கிளைகள் பல இடங்களில் மூடப்பட்டு உள்ளன. தற்போது, இந்த அலுவலகத்தின் செயல்பாடுகளும் சரியாக இல்லை. இதனால் நாங்கள் மோசடி செய்யப்படப்போகிறோமோ? என்ற அச்சம் எழுந்துள்ளது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என்றனர்.
இதற்கிடையே, வாடிக்கையாளர்களிடம் நிறுவன அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர். ஆனால், அதில் உடனடியாக உடன்பாடு ஏற்படவில்லை. இதற்கிடையே, அங்கு வந்த போலீசார் சமாதான பேச்சு நடத்தி போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வந்தனர்.