சிதம்பரம் அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் ஆர்ப்பாட்டம்
சிதம்பரம் அருகே தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற கோரி கிராம மக்கள் திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சிதம்பரம்,
சிதம்பரம் அருகே உள்ள சி.கொத்தங்குடி ஊராட்சிக்கு உட்பட்டது திடல்மேடு காலனி. இங்கு 50–க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதியில் உள்ள மழைநீர் வடிகால் வாய்க்கால் முறையான பராமரிப்பின்றி தூர்ந்து போய் காணப்படுகிறது. மேலும் அப்பகுதியை சேர்ந்த சிலர் அந்த வாய்க்காலை ஆக்கிரமித்துள்ளனர். இதனால் மழைக்காலங்களில் வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் தண்ணீர் புகுந்து வருகிறது.
இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு சிதம்பரம் பகுதியில் பலத்த மழை பெய்தது. அப்போது வடிகால் வாய்க்காலில் தண்ணீர் செல்ல முடியாமல் வீடுகளுக்குள் புகுந்தது. இதனால் அப்பகுதி மக்கள் இரவு முழுவதும் தங்கள் வீடுகளில் தூங்க முடியாமல் அவதிப்பட்டனர்.
இந்நிலையில் பாதிக்கப்பட்ட மக்கள் நேற்று காலை அப்பகுதியில் உள்ள சாலைக்கு திரண்டு வந்து திடீரென ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது அவர்கள், குடியிருப்பு பகுதியில் தேங்கி நிற்கும் மழைநீரை அகற்ற வேண்டும், தூர்ந்து போன வடிகால் வாய்க்காலை தூர்வாரி ஆக்கிரமிப்புகளை உடனே அகற்ற வேண்டும் என்று கோஷங்கள் எழுப்பினர். தொடர்ந்து அதிகாரிகள் யாரும் பேச்சுவார்த்தை நடத்த வராததால், ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்று விட்டனர். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.