மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்கள்


மழைநீர் சூழ்ந்ததால் வீடுகளை விட்டு வெளியேறும் பொதுமக்கள்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 1:56 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது.

திருவள்ளூர்,

திருவள்ளூர் மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் பலத்த மழை காரணமாக பல்வேறு கிராமங்களில் வீடுகளை மழைநீர் சூழ்ந்து நிற்கிறது. கடம்பத்தூர் ஊராட்சிக்கு உட்பட்ட கன்னியம்மா நகரில் 100–க்கும் மேற்பட்ட வீடுகளை மழைநீர் சூழ்ந்தது.

இந்தநிலையில் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட பகுதிகளை மாவட்ட கலெக்டர் சுந்தரவல்லி, திருவள்ளூர் ஆர்.டி.ஓ. திவ்யஸ்ரீ, தாசில்தார் தமிழ்ச்செல்வன் ஆகியோர் பார்வையிட்டனர்.

அப்போது கன்னியம்மா நகரில் பாதுகாப்பு இல்லாத வீடுகளில் வசித்து வந்த 58 பேர் வெளியேற்றப்பட்டு வெண்மணப்புதூரில் உள்ள தொடக்கப்பள்ளியில் அமைக்கப்பட்ட நிவாரண முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.

ஆனால் அங்கு அவர்களுக்கு போதிய சாப்பாடு வசதி செய்யப்படவில்லை என்று கூறப்படுகிறது. மேலும் இரவில் மட்டும் நிவாரண முகாமில் தங்கும்படி அதிகாரிகள் சிலர் கூறியதாகவும் தெரிகிறது. இதையடுத்து நிவாரண முகாமில் இருந்த 58 பேரும் அங்கிருந்து வெளியேறி மீண்டும் தங்களது வீடுகளுக்கு திரும்பினர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு மீண்டும் அந்த பகுதியில் கனமழை கொட்டியது. இதனால் வீடுகளை மழைநீர் சூழ்ந்ததால் அப்பகுதி மக்கள், எங்கும் செல்ல முடியாமல் மழை வெள்ளத்தில் சிக்கி தவித்து வருகிறார்கள். சிலர் தங்கள் வீடுகளை காலி செய்து விட்டு மூட்டை முடிச்சுகளுடன் வெளியேறி உறவினர்கள், நண்பர்கள் வீடுகளில் தஞ்சம் அடைந்து வருகின்றனர்.


Next Story