ஊத்துக்கோட்டையில் பலத்த மழை 120 வருட பழமையான அரசு பள்ளியில் மழைநீர் புகுந்தது
ஊத்துக்கோட்டையில் பெய்த பலத்த மழை காரணமாக 120 வருட பழமை வாய்ந்த அரசு பள்ளிக்கூடத்தில் மழைநீர் புகுந்தது. மாணவர்களுக்கு தொற்றுநோய் பரவாமல் தடுக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
ஊத்துக்கோட்டை,
திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை போலீஸ் நிலையம் எதிரே அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி உள்ளது. இந்த பள்ளி 1898–ம் வருடம் தொடங்கப்பட்டது. சுமார் 120 வருட பழமையான இந்த பள்ளியில் தற்போது 1–ம் வகுப்பில் இருந்து 5–ம் வகுப்பு வரை 200 மாணவ–மாணவிகள் படித்து வருகின்றனர். இங்கு படித்த பல மாணவர்கள், தற்போது பல்வேறு துறைகளில் சிறந்து விளங்கி வருகின்றனர்.
இந்தநிலையில் ஊத்துக்கோட்டை சுற்று வட்டார பகுதிகளில் கடந்த சில நாட்களாக பலத்த மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு முதல் நேற்று காலை வரை விடிய, விடிய பலத்த மழை கொட்டித்தீர்த்தது. இதனால் சாலைகளில் மழைநீர் வெள்ளம் போல் கரைபுரண்டு ஓடியது.
இதனால் பழமையான இந்த அரசு ஒன்றிய தொடக்கப்பள்ளி வளாகத்துக்குள் மழைநீர் புகுந்தது. சுமார் 3 அடி உயரத்துக்கு தண்ணீர் தேங்கி நிற்கிறது. தொடர் மழை காரணமாக தற்போது பள்ளிக்கு விடுமுறை விடப்பட்டு உள்ளது.
ஒவ்வொரு முறையும் மழை பெய்யும் போது இங்கு மழைநீர் தேங்கி நிற்கிறது. ஆனால் தற்போது அதிகளவில் தேங்கி உள்ளது. டெங்கு, விஷக்காய்ச்சல், மலேரியா உள்ளிட்ட நோய்கள் பரவி வரும் தற்போதைய சூழ்நிலையில் பள்ளி வளாகத்தில் மழைநீர் தேங்கி நிற்பது மாணவ–மாணவிகளுக்கு தொற்றுநோய் பரவ வாய்ப்பு உள்ளது.
எனவே அதை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். பள்ளியில் மழைநீர் தேங்காமல் இருக்க மழைநீர் கால்வாய்கள் அமைக்க வேண்டும் என மாணவர்களின் பெற்றோர்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.