கிராமம், கிராமமாக சென்று அமைச்சர் கந்தசாமி மழை சேதங்களை பார்வையிட்டார்
ஏம்பலம் தொகுதியில் அமைச்சர் கந்தசாமி கிராமம் கிராமமாக சென்று மழை சேதங்களை பார்வையிட்டார். அப்போது மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு உணவு வழங்க நடவடிக்கை எடுத்தார்.
பாகூர்,
புதுச்சேரி மாநிலத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமாக பெய்து வருகிறது. கடந்த ஒரு வார காலமாக பெய்துவந்த தொடர் மழை நேற்றுக்காலை சற்று வெறித்தது. பகல் முழுவதும் வெயில் அடித்தது. இந்த நிலையில் மாலையில் மீண்டும் மழை பெய்யத் தொடங்கியது. பல இடங்களில் விட்டு விட்டு மழை பெய்த வண்ணம் இருந்தது. இரவில் இந்த மழை தீவிரமடைந்தது. மாநிலம் முழுவதம் பரவலாக இடி–மின்னலுடனும் காற்றுடனும் பலத்த மழையாக பெய்தது.
இந்த மழையின் காரணமாக தாழ்வான பல இடங்களில் மழைநீர் புகுந்து தேங்கியது. புதுச்சேரி கிழக்கு கடற்கரை சாலையில் முழங்கால் அளவுக்கு தண்ணீர் வெள்ளமென பெருக்கெடுத்து ஓடியது. அதேபோல் புதுச்சேரி நகரின் பல்வேறு பகுதிகளில் தெருக்களில் சாக்கடை அடைப்பு காரணமாக மழைநீர் வேகமாக வடிய வழியில்லாமல் தெருக்களில் தேங்கியது. சில இடங்களில் வீடுகளுக்குள்ளும் தண்ணீர் புகுந்தது.
ஏம்பலம் தொகுதிக்குட்பட்ட பல கிராமங்கள் இந்த மழையினால் கடுமையாக பாதிக்கப்பட்டன. பல இடங்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால் அவை தீவுபோல் மாற்றியது. இங்கு மழையினால் ஏற்பட்ட பாதிப்புகளை அமைச்சர் கந்தசாமி நேற்றுக் காலை அதிகாரிகளுடன் கிராமம், கிராமாக சென்று பார்வையிட்டார். நேற்றுக் காலை அவர் கிருமாம்பாக்கம், பிள்ளையார்குப்பம், பனித்திட்டு, ஆலடிமேடு, நரம்பை, ஏம்பலம், கந்தன்பேட், குடியிருப்பு பாளையம், அரங்கனூர், சேலியமேடு ஆகிய கிராமங்களுக்கு சென்று மழை பாதிப்புகளை ஆய்வு செய்தார்.
இதில் கிருமாம்பாக்கம்பேட், பனித்திட்டு, ஆலடிமேடு, அரங்கனூர், சேலியமேடு ஆகிய கிராமங்களில் வீடுகளுக்குள் மழை நீர் புகுந்ததால் அவற்றில் வசித்த மக்கள் பெரும் அவதிக்குள்ளானார்கள். அந்த பகுதிகளை பார்வையிட்ட அமைச்சர் வீடுகளில் புகுந்த மழைநீரை வெளியேற்ற நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். பல இடங்களில் சுமார் முட்டுளவு தண்ணீர் தேங்கியிருந்தது. அங்கும் அதிகாரிகளுடன் சென்று அமைச்சர் பார்வையிட்டார்.
இந்த பகுதிகளில் மழையால் பாதிக்கப்பட்ட சுமார் 2 ஆயிரம் பேருக்கு உடனடியாக மதிய உணவு வழங்க நடவடிக்கை எடுக்கும்படி அதிகாரிகளை அவர் கேட்டுக்கொண்டார்.
இந்த ஆய்வின்போது அமைச்சருடன் வேளாண்மைதுறை இயக்குனர் பங்கஜ்குமார்ஜா, பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் மோகன், தாசில்தார் கார்த்திகேயன், கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் சுந்தர்ராஜன், வருவாய் அதிகாரி தட்சிணாமூர்த்தி உள்ளிட்ட பலர் உடன் சென்றனர்.