மருத்துவ கழிவுகளை அகற்றாத தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை


மருத்துவ கழிவுகளை அகற்றாத தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் கலெக்டர் நடவடிக்கை
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:40 AM IST)
t-max-icont-min-icon

மருத்துவ கழிவுகளை அகற்றாத தனியார் ஆஸ்பத்திரிக்கு ரூ.50 ஆயிரம் அபராதம் விதித்து கலெக்டர் கதிரவன் நடவடிக்கை எடுத்தார்.

மத்தூர்,

கிருஷ்ணகிரி மாவட்டம் சந்தூர், கண்ணன்டஅள்ளி, மத்தூர், ஊத்தங்கரை பகுதிகளில் நடைபெற்று வரும் டெங்கு தடுப்பு மற்றும் சுகாதார பணிகளை மாவட்ட கலெக்டர் கதிரவன் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தார். மேலும் அப்பகுதிகளில் வீடு, வீடாக சென்று பார்வையிட்டார்.

இதையொட்டி சந்தூர் பகுதியில் இயங்கி வரும் தனியார் ஆஸ்பத்திரியில் கலெக்டர் ஆய்வு மேற்கொண்டார். அப்போது அங்கு மருத்துவ கழிவுகள் முறையாக அகற்றாமல் இருந்தது கண்டுபிடிப்பட்டது. இதைத் தொடர்ந்து அந்த ஆஸ்பத்திரிக்கு ரூ. 50 ஆயிரம் அபராதம் விதிக்க கலெக்டர் கதிரவன் உத்தரவிட்டார்.

தொடர்ந்து கண்ணன்டஅள்ளி கிராமத்தில் ஆய்வு மேற்கொண்டபோது வெங்கடேசன் என்பவர் வீட்டில் பழைய பிளாஸ்டிக் கழிவுகள் மற்றும் தேவையற்ற பொருட்கள் இருந்ததையடுத்து அவருக்கு ரூ.5 ஆயிரம் அபராதம் விதிக்கவும், மளிகை கடையில் பேப்பர் கப் வைத்திருந்த உரிமையாளருக்கு ரூ.2 ஆயிரமும், பாலு மற்றும் வாசுதேவன் ஆகியோருடைய வீட்டில் குடிநீர் தொட்டிகளில் கொசுப்புழுக்கள் இருந்ததையடுத்து அவர்களுக்கு தலா ரூ.2 ஆயிரமும், சுகாதார பணிகளை சரியாக மேற்கொள்ளாத ஊராட்சி செயலர் முருகேசன் என்பவருக்கு ரூ.5 ஆயிரமும் அபராதமாக விதிக்கப்பட்டது. நேற்று நடந்த ஆய்வில் மொத்தம் ரூ.66 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டு உடனடியாக வசூலிக்கப்பட்டது.

இந்த ஆய்வின் போது துணை இயக்குனர் (சுகாதார பணிகள்)பிரியாராஜ், பர்கூர் வட்டார வளர்ச்சி அலுவலர்கள் தேவகி, முகமதுபயாஸ் மற்றும் அலுவலர்கள் உடன் இருந்தனர். 

Related Tags :
Next Story