மாணவி சாவு எதிரொலி: தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்


மாணவி சாவு எதிரொலி: தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ-மாணவிகள் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:41 AM IST)
t-max-icont-min-icon

மாணவி சாவு எதிரொலியால் தனியார் என்ஜினீயரிங் கல்லூரி மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

க.பரமத்தி,

கோவை மாவட்டம், குமாரபாளையத்தை சேர்ந்தவர் கருப்புசாமி. இவருடைய மகள் ஜனனி(வயது 19). இவர் கரூர் மாவட்டம், க.பரமத்தி அருகே காருடையாளம் பாளையத்தில் உள்ள வி.எஸ்.பி. என்ஜினீயரிங் கல்லூரியில், விடுதியில் தங்கி இ.சி.இ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். இவருக்கு கடந்த மாதம் உடல்நிலை சரியில்லாததால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றார். பின்னர் விடுதி திரும்பிய அவருக்கு நேற்று முன்தினம் அதிகாலை திடீரென வாந்தி, மயக்கம் ஏற்பட்டது. இதையடுத்து அவரை கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர், அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக கூறினார். இதையடுத்து மாணவியின் உடல் பிரேத பரிசோதனைக்காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இதுகுறித்து க.பரமத்தி போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்.

இந்தநிலையில் வி.எஸ்.பி. என்ஜினீயரிங் கல்லூரியில் படிக்கும் மாணவ- மாணவிகள் நேற்று காலை கல்லூரியின் நுழைவு வாயில் முன்பு அமர்ந்து, மாணவியின் சாவில் மர்மம் இருப்பதாகவும், கல்லூரி விடுதியில் தரமற்ற உணவு வழங்கப்படு வதாகவும் கூறி தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த கல்லூரி நிர்வாகத்தினர் மாணவ- மாணவிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில், உடன்பாடு ஏற்படவில்லை. பின்னர் இதுகுறித்து தகவல் அறிந்த கரூர் வருவாய் கோட்டாட்சியர் சரவணமூர்த்தி, அரவக் குறிச்சி தாசில்தார் சந்திரசேகரன், அரவக்குறிச்சி துணை போலீஸ் சூப்பிரண்டு முத்தமிழ்செல்வன், போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் குணசேகர், குருநாதன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கல்லூரி நிர்வாகத்தினரையும், மாணவர்களில் 10 பேரையும், மாணவிகளில் 10 பேரையும் அழைத்து பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது போலீசார் தரப்பில் கூறப்பட்டதாவது:-

மாணவியின் உடல் இன்று (நேற்று) பிரேத பரிசோதனை செய்யப்படுகிறது. பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின்னர்தான் மாணவி எப்படி? இறந்தார் என்பது தெரியவரும். எனவே அதுவரை பொறுமையாக இருங்கள். பிரேத பரிசோதனைக்கு பின்னர் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினர்.

இதையடுத்து கல்லூரி நிர்வாகிகள் கூறுகையில், விடுதியில் வழங்கும் உணவு தரமானதாக வழங்கப்படும், மேலும் மாதம் ஒருமுறை மாணவ-மாணவிகளை அழைத்து கூட்டம் நடத்தி அவர்களின் குறைகளை கேட்டு அதனை நிவர்த்தி செய்யப்படும் என்று கூறினர்.

இதனை ஏற்றுக்கொண்ட மாணவ- மாணவிகள் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டவர் களிடம், இந்த தகவலை தெரிவித்தனர். அப்போது அவர்களுக்கு இடையே சிறிது நேரம் சலசலப்பு ஏற்பட்டது. இதையடுத்து மழை பெய்யத்தொடங்கியது. பின்னர் மாணவ- மாணவிகள் தங்களது போராட்டத்தை கைவிட்டு கல்லூரிக்குள் சென்றனர்.

உள்ளே செல்லும்போது, மாணவர்களில் இரு தரப்பினருக்கு இடையே திடீரென மோதல் ஏற்பட்டது. இதில் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த பேராசிரியர்கள் அவர்களை சமாதானம் செய்து வகுப்பறைக்கு அழைத்து சென்றனர். இதனால் கல்லூரியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. 

Related Tags :
Next Story