அரசை விமர்சித்து கேலி சித்திரம்: கைதான “கார்ட்டூனிஸ்ட்” கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை


அரசை விமர்சித்து கேலி சித்திரம்: கைதான “கார்ட்டூனிஸ்ட்” கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு ஜாமீனில் விடுதலை
x
தினத்தந்தி 7 Nov 2017 4:45 AM IST (Updated: 7 Nov 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

அரசை விமர்சித்து கேலி சித்திரம் வெளியிட்டு கைதான ‘கார்ட்டூனிஸ்ட்‘ பாலாவை போலீசார் நேற்று நெல்லை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். பின்னர் அவர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். அப்போது கோர்ட்டு வளாகத்தில் போலீசாருக்கும், வக்கீல்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.

நெல்லை,

நெல்லை மாவட்டம் தென்காசி அருகே உள்ள காசிதர்மத்தை சேர்ந்த இசக்கிமுத்து என்பவர் கடந்த மாதம் 23-ந் தேதி நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் குடும்பத்துடன் தற்கொலை செய்து கொண்டார். ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவத்தை கண்டித்து ‘கார்ட்டூனிஸ்ட்‘ பாலா என்பவர் அரசை விமர்சித்து ஒரு கேலிச்சித்திரம் வரைந்து இருந்தார். இந்த கேலிசித்திரம் சமூக வலைதளங்களில் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

நெல்லை மாவட்ட கலெக்டர் சந்தீப் நந்தூரி கொடுத்த புகாரின் பேரில் நெல்லை மாவட்ட சிறப்பு புலனாய்வு குற்றப்பிரிவு போலீசார் 2 பிரிவுகளின் கீழ் பாலா மீது வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர். விசாரணையில், பாலா காஞ்சீபுரம் மாவட்டம் மாங்காட்டை அடுத்த கோவூர் பெரியபனிச்சேரி பகுதியைச் சேர்ந்தவர் என்பது தெரிய வந்தது.

நேற்று முன்தினம் நெல்லை மாவட்ட சிறப்பு குற்றப்பிரிவு தனிப்படை போலீசார் காஞ்சீபுரம் சென்றனர். அங்கு வீட்டில் இருந்த பாலாவை கைது செய்தனர்.

கைதான பாலாவை போலீசார் நேற்று காலை நெல்லை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்துக்கு அழைத்து வந்தனர். அங்கு உயர் போலீஸ் அதிகாரிகள் அவரிடம் விசாரணை நடத்தினர்.

பின்னர் பாலாவை நெல்லை மாவட்ட முதலாவது ஜூடிசியல் மாஜிஸ்திரேட்டு கோர்ட்டில் போலீசார் ஆஜர்படுத்தினர். அவருடைய தரப்பு வக்கீல்கள் ஜாமீன் கேட்டு மனு தாக்கல் செய்தனர். போலீஸ் தரப்பில் வழக்கை மேலும் விசாரிக்க வேண்டியது இருப்பதால் ஜாமீன் வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவித்து மனு தாக்கல் செய்தனர்.

இந்த வழக்கை மாஜிஸ்திரேட்டு ராம்தாஸ் விசாரித்து இருநபர் ஜாமீன் வழங்க வேண்டும் என்ற நிபந்தனையுடன் பாலாவுக்கு ஜாமீன் வழங்கினார். வழக்கு விசாரணையை நாளை மறுநாள் (வியாழக்கிழமை) ஒத்தி வைத்ததுடன், அன்று பாலாவை கோர்ட்டில் ஆஜராகவும் உத்தரவிட்டு பாலாவை ஜாமீனில் விடுதலை செய்தார்.

ஜாமீனில் விடுதலையான பிறகு பாலா கோர்ட்டுக்கு வெளியே நின்று கொண்டு இருந்தார். அப்போது விசாரணை நடத்த வேண்டும் வாருங்கள் என்று கூறி போலீஸ் இன்ஸ்பெக்டர் அனிதா, பாலாவை அழைத்து செல்ல முயன்றார். அங்கு நின்ற பாலாவின் வக்கீல்கள் இதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.

கோர்ட்டு ஜாமீன் வழங்கிய பிறகும் விசாரணைக்கு அழைப்பது தவறு என்று கூறினர். பாலா மீது பொய் வழக்கு போட போலீசார் முயற்சி செய்கிறார்கள் என வக்கீல்கள் தெரிவித்தனர். இதனால் வக்கீல்களுக்கும், போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு தள்ளு, முள்ளும் ஏற்பட்டது. இதனால் கோர்ட்டு வளாகத்தில் திடீர் பரபரப்பு ஏற்பட்டது.

இது தொடர்பாக வக்கீல்கள், மாஜிஸ்திரேட்டு ராம்தாசிடம் முறையிட்டனர். அவர் போலீசாரை அழைத்து ஜாமீன் வழங்கப்பட்டு உள்ளது. தேவைப்பட்டால் போலீசார் சம்மன் அனுப்பி பாலாவை விசாரிக்கலாம். இப்போது அவரை விசாரிக்க கூடாது என உத்தரவிட்டார். இதையடுத்து போலீசார் பாலாவை விட்டு, விட்டு வெளியே சென்றனர்.

கார்ட்டூனிஸ்ட் பாலா கைது செய்யப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெல்லை கோர்ட்டு வளாகத்தில் நேற்று காலை மக்கள் அதிகாரம் என்ற அமைப்பினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

அப்போது அவர்கள், “கந்து வட்டி கொடுமையால் ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 பேர் தீக்குளித்து தற்கொலை செய்ய காரணமாக இருந்த நெல்லை மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரை மாற்ற வேண்டும்“ என்று கோஷங்கள் எழுப்பினர். அவர்களை போலீசார் சமாதானப்படுத்தி அனுப்பி வைத்தனர். 

Related Tags :
Next Story