புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்


புதிதாக கட்டப்பட்ட வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியல்
x
தினத்தந்தி 7 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 2:42 AM IST)
t-max-icont-min-icon

மீன்சுருட்டி அருகே பரவலாக மழை பெய்து வருவதால் சுண்டிபள்ளம் கிராமத்தில் புதிதாக கட்டப்பட்ட ஊராட்சி நடுநிலைப்பள்ளி வகுப்பறையில் தண்ணீர் தேங்கியது. இதனால் ஆத்திரமடைந்த பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

மீன்சுருட்டி,

அரியலூர் மாவட்டம் மீன்சுருட்டி அருகே சுண்டிபள்ளம் கிராமம் உள்ளது. இந்த கிராமத்தில் ஊராட்சி நடுநிலைப்பள்ளியில் ரூ.11 லட்சத்து 80 ஆயிரம் மதிப்பீட்டில் புதிதாக 2 வகுப்பறை கட்டிடம் கட்டப்பட்டது. இந்த பள்ளி கட்டிடத்தை கடந்த 2-ந்தேதி மாவட்ட கலெக்டர் லட்சுமி பிரியா தலைமையில், அரசு தலைமை கொறடா தாமரை ராஜேந்திரன் திறந்து வைத்தார். இந்த நடுநிலைப்பள்ளியில் 124 மாணவ-மாணவிகள் படித்து வருகின்றனர். 7 ஆசிரியை, ஆசிரியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அப்பகுதியில் பரவலாக மழை பெய்து வருகிறது. இந்த மழையின் காரணமாக புதிய வகுப்பறை கட்டிடத்தில் ஆங்காங்கே நீர் கசிவு ஏற்பட்டுள்ளது. இந்த நீர் கசிவால் வகுப்பறையில் ஈரமாகி, தண்ணீர் தேங்கியது. இந் நிலையில் நேற்று பள்ளிக்கு மாணவர்களை அழைத்து சென்ற பெற்றோர்கள் வகுப்பறையில் தண்ணீர் தேங்கியுள்ளதை கண்டு அதிர்ச்சியடைந்தனர். இதனால் ஆத்திரமடைந்த மாணவர்களின் பெற்றோர்கள், பொதுமக்கள் சுண்டிபள்ளம் சென்னை- கும்பகோணம் தேசிய நெடுஞ்சாலையில் மறியலில் ஈடுபட்டனர்.

இதுகுறித்து தகவல் அறிந்த மீன்சுருட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் மணிவண்ணன், வட்டார வளர்ச்சி அலுவலர் அமிர்தலிங்கம் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர் அதிகாரிகள் புதிய பள்ளி கட்டிடத்தை சீர் செய்து தருவதாக கூறியதையடுத்து பொதுமக்கள் சாலை மறியலை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் சென்னை- கும்பகோணம் சாலையில் 1 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 

Related Tags :
Next Story