இந்திராகாந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு; காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு


இந்திராகாந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு;  காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் 2 எம்.எல்.ஏ.க்கள் பங்கேற்பு
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 7 Nov 2017 10:55 PM IST)
t-max-icont-min-icon

நாகர்கோவிலில் இந்திராகாந்தி சிலையை அகற்ற எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் கட்சியினர் ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் 2 எம்.எல்.ஏ.க்கள் கலந்து கொண்டனர்.

நாகர்கோவில்,

நாகர்கோவில் கே.பி.ரோட்டில் சாலை விரிவாக்கம் செய்யும் பணி நடந்து வருகிறது. இதற்காக மின் கம்பங்கள் மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் உள்ள மரங்களும் வெட்டி அகற்றப்பட்டன. எனவே அப்பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலையும் அகற்றப்படும் என கூறப்பட்டது.

இந்திரா காந்தி பிறந்தநாள் மற்றும் நினைவு நாட்களில் காங்கிரஸ் கட்சியினர் இந்த சிலைக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வரும் நிலையில், இந்த சிலை அகற்றப்படும் என தகவல்கள் வெளியானது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இதற்கு காங்கிரஸ் கட்சியினர் பலத்த எதிர்ப்பு தெரிவித்து வருகிறார்கள். கலெக்டரிடமும் மனு கொடுத்தனர்.

இதற்கிடையே நேற்று மத்தியாஸ் வார்டு சந்திப்பு பகுதியில் உள்ள இந்திரா காந்தி சிலை முன், குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் கட்சி தலைவர் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில், எம்.எல்.ஏ.க்கள் ராஜேஷ்குமார், பிரின்ஸ் ஆகியோர் முன்னிலையில் காங்கிரஸ் கட்சியினர் திரண்டனர்.

பின்னர் அவர்கள் சாலை விரிவாக்கப் பணிக்காக இந்திராகாந்தி சிலையை அகற்றக்கூடாது என வலியுறுத்தியும், சிலையை அகற்றும் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்தும் கோ‌ஷங்களை எழுப்பி சிறிது நேரம் ஆர்ப்பாட்டம் செய்தனர்.

 பின்னர் நாகர்கோவிலில் உள்ள கலெக்டர் அலுவலகத்தில் வக்கீல் ராதாகிருஷ்ணன் தலைமையில் காங்கிரஸ் கட்சியினர் மனு கொடுத்தனர். அதில் அவர்கள் கூறியிருப்பதாவது:–

மத்தியாஸ் வார்டு சந்திப்பில் உள்ள இந்திராகாந்தி சிலை போக்குவரத்துக்கு இடையூறு இன்றி அமைந்துள்ளது. எனவே இந்த சிலையை அதிகாரிகள் அகற்ற நினைத்தால் மக்கள் சக்தியோடு தொடர் போராட்டங்கள் நடத்தப்படும். எனவே இந்த சிலையை இடமாற்றம் செய்யாமல் அதே இடத்தில் இருக்க அனுமதிக்குமாறு கேட்டுக்கொள்கிறோம். இவ்வாறு அவர்கள் கூறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சிகளில் காங்கிரஸ் கட்சி நிர்வாகிகள் பாபு ஆண்டனி, மகேஷ்லாசர், அனிதா, தங்கம் நடேசன், அந்தோணிமுத்து, குமரி முருகேசன், அய்யப்பன், ஜாகீர் உசேன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story