உரம் தயாரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்


உரம் தயாரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 12:10 AM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீரங்கத்தில் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறைபிடித்து பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஸ்ரீரங்கம்,

திருச்சி மாநகராட்சிக்குட்பட்ட ஸ்ரீரங்கம் 3-வது வார்டு டிரைனேஜ் தெருவில் குப்பைகளிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 1-வது வார்டிற்குரிய உரம் தயாரிக்கும் மையத்தை அங்கு அமைக்காமல் 3-வது வார்டு இந்திராநகர் பகுதியில் அமைக்க மாநகராட்சி நிர்வாகம் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

அதற்குரிய பணிகள் 3-வது வார்டு இந்திராநகர் பகுதியில் பொக்லைன் எந்திரம் மூலம் நேற்று தொடங்கப்பட்டது. இதனை கண்ட அப்பகுதி பொதுமக்கள் இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொக்லைன் எந்திரத்தை சிறை பிடித்து போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களிடம் மாநகராட்சி அதிகாரிகள் பேச்சு வார்த்தை நடத்தினர். அப்போது அதிகாரிகளுக்கும், பொதுமக்களுக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது. பின்னர் சமாதானம் அடைந்த பொதுமக்கள், அதிகாரிகளிடம் கூறுகையில், ஏற்கனவே 3-வது வார்டில் குப்பையிலிருந்து உரம் தயாரிக்கும் மையம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த மையத்தால் இப்பகுதியில் துர்நாற்றம் மற்றும் கொசுத்தொல்லை ஏற்பட்டுள்ளது. இதனால் பெரும் அவதிக்குள்ளாகி வருகிறோம்.

இந்நிலையில் 1-வது வார்டிற்குரிய உரம் தயாரிக்கும் மையத்தையும் இங்கு கொண்டு வருவது எங்களுக்கு மேலும் தொல்லைகளுக்கு வழி வகுக்கும். எனவே, இங்கு மேலும் ஒரு உரம் தயாரிக்கும் மையம் அமைக்கக்கூடாது, அப்படி அமைத்தால் அதற்கு நாங்கள் தொடர்ந்து எதிர்ப்பு தெரிவிப்போம் என்றனர்.

இதையடுத்து 3-வது வார்டில் உரம் தயாரிக்கும் மையம் அமைக்க வந்த அதிகாரி களும், பணியாளர்களும் அங்கிருந்து திரும்பி சென்றனர்.

பின்னர் 3-வது வார்டு பொதுமக்கள் தங்கள் பகுதியில் மேலும் ஒரு உரம் தயாரிக்கும் மையம் அமைக்க கூடாது என அனைவரிடமும் கையெழுத்து பெற்று கோரிக்கை மனுவை ஸ்ரீரங்கம் கோட்ட உதவி ஆணையர் ஞானவேல் நிகா தீபனிடம் அளித்தனர். 

Next Story