பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள்– உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்


பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி வாகன ஓட்டுனர்கள்– உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 12:29 AM IST)
t-max-icont-min-icon

கோவையில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர்.

கோவை,

அனைத்து வகையான வாகனங்களையும் வாடகைக்கு ஓட்ட அனுமதி வழங்க வேண்டும், கனரக வாகனங்களுக்கு இருப்பதுபோன்று சுற்றுலா வாகனங்களுக்கும் தேசிய அளவிலான அனுமதி வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அனைத்து வாகன ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் சங்கத்தின் கோவை மாவட்ட ஒருங்கிணைப்புக்குழு சார்பில் உண்ணாவிரத போராட்டம் கோவை சிவானந்தாகாலனியில் நேற்று நடந்தது.

இதில் கோவை மாவட்டத்தில் உள்ள அனைத்து வாகனங்களின் ஓட்டுனர்கள் மற்றும் உரிமையாளர்கள் பலர் கலந்து கொண்டனர். அவர்கள் தங்கள் கோரிக்கைகள் குறித்து பேசினார்கள். அப்போது அவர்கள் கூறியதாவது:–

தமிழகத்தில் சில வாகனங்களுக்குதான் வாடகைக்கு ஓட்ட அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் நமது அண்டை மாநிலமான கேரளா, கர்நாடகாவில் அனைத்து வகையான வாகனங்களையும் வாடகைக்கு ஓட்ட அனுமதிக்கிறார்கள். இதனால் அங்கு சொந்த தேவைக்காக வைத்திருக்கும் வாகனங்கள் வாடகைக்கு விடப்படுவது இல்லை. ஆனால் கோவை மாவட்டத்தில் 500–க்கும் மேற்பட்ட சொந்த வாகனங்கள் (ஓன் போர்டு) வாடகைக்கு விடப்படுகிறது. இதன் காரணமாக வாடகைக்கு வாகனங்களை ஓட்டி வரும் நாங்கள் பாதிக்கப்பட்டு வருகிறோம்.

அதுபோன்று டெம்போ டிராவலர், மஸ்தா ஆகிய வாகனங்களில் நமது மாநிலத்தில் 13 பேரை ஏற்றிச்செல்ல மட்டுமே அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் பிற மாநிலங்களில் 24 பேர் வரை ஏற்றிச்செல்ல அனுமதிக்கிறார்கள். ஆனால் நாங்கள் 20 பேரை ஏற்றிச்செல்லதான் அனுமதி கேட்டு வருகிறோம். அது குறித்து அரசு தான் முடிவு எடுக்க வேண்டும் என்று அதிகாரிகள் கூறுகிறார்கள்.

மேலும் தமிழகத்தை சேர்ந்த சுற்றுலா வாகனங்களுக்கு ஆந்திரா, கர்நாடகா, புதுச்சேரி, கேரளா, கோவா ஆகிய மாநிலங்களுக்கு மட்டுமே செல்ல அனுமதி வழங்கப்படுகிறது. ஆனால் மற்ற மாநிலங்களை சேர்ந்த வாகனங்களுக்கு தேசிய அளவில் செல்ல அனுமதி அளிக்கப்படுகிறது. எனவே தமிழகத்தில் உள்ள அனைத்து சுற்றுலா வாகனங்களுக்கும் தேசிய அளவில் சென்று வர அனுமதியை வழங்க வேண்டும்.

எங்கள் கோரிக்கைகளை அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில் நாங்கள் ஒருநாள் மட்டும் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டு உண்ணாவிரத போராட்டம் நடத்துகிறோம். கோரிக்கைகள் ஏற்கப்படவில்லை என்றால் சங்க உறுப்பினர்கள் அனைவரும் சேர்ந்து ஆலோசித்து முடிவு செய்து போராட்டத்தை அறிவிப்போம்.

இவ்வாறு அவர்கள் கூறினார்கள்.


Next Story