வீரபாண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்


வீரபாண்டி அருகே டாஸ்மாக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டம்
x
தினத்தந்தி 8 Nov 2017 4:30 AM IST (Updated: 8 Nov 2017 1:15 AM IST)
t-max-icont-min-icon

வீரபாண்டி அருகே தேவாரம்பாளையத்தில் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், கடையை அகற்றக்கோரியும் பொதுமக்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டனர். அத்துடன் அந்தபகுதியில் விசைத்தறிகளும் இயக்கப்படவில்லை.

வீரபாண்டி,

திருப்பூர் மாவட்டம் இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட தேவாரம்பாளையம் பகுதியில் கடந்த 2–ந் தேதி புதிதாக டாஸ்மாக் கடை திறக்கப்பட்டது. இதற்கு அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த நிலையில், அமைதிப்பூங்காவாக திகழ்ந்து வரும் தங்கள் பகுதிக்குள் உயிரை பறிக்கும் டாஸ்மாக் கடையை நடத்தக்கூடாது என்றும், மேலும் கடை அமைந்துள்ள இடம் விவசாய நிலம் என்றும் கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு போராட்டங்களை நடத்தினார்கள்.

இதன் ஒரு பகுதியாக கடந்த 5–ந் தேதி 300–க்கும் மேற்பட்ட பொதுமக்கள் டாஸ்மாக் கடை அமைந்துள்ள இடத்தின் உரிமையாளரான சதீஷ்குமார் என்பவர் வீட்டின் முன்பு திடீர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த சம்பவம் பற்றிய தகவல் கிடைத்ததும் வருவாய்த்துறை அதிகாரிகள் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர். அவர்கள் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது, சதீஷ்குமார் வந்து கடை உடனடியாக அகற்றப்படும் என்று உறுதி அளித்தால்தான் அங்கிருந்து கலைந்து செல்வோம் என்று அவர்கள் கூறியதுடன் தொடர்ந்து தர்ணாவிலும் ஈடுபட்டனர்.

அதைத்தொடர்ந்து அன்று இரவு பொதுமக்களிடம் பேசிய சதீஷ்குமார், கடையை அகற்ற நாளை மாலை 6 மணி வரை அவகாசம் கோரியிருந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் மீண்டும் டாஸ்மாக் கடை வழக்கம்போல் செயல்பட்டது. இதனால் ஆத்திரம் அடைந்த அப்பகுதி பொதுமக்கள் ஒன்று திரண்டு உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட முடிவு செய்தனர்.

அதன்படி நேற்று காலை முதல் அந்த பகுதியில் உள்ள விசைத்தறி மற்றும் அனைத்து தொழில்கூடங்களும் இயங்கவில்லை. பின்னர் அந்த பகுதியை சேர்ந்த ஏராளமானவர்கள் அங்குள்ள ஒரு தனியார் மண்டபத்தில், டாஸ்மாக் கடைக்கு எதிர்ப்பு தெரிவித்தும், அந்த கடையை அங்கிருந்து அகற்றக்கோரியும் உண்ணாவிரத போராட்டத்தை தொடங்கினார்கள்.

இதுபற்றிய தகவல் கிடைத்ததும் மங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வேல்முருகன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அப்போது இச்சிப்பட்டி ஊராட்சிக்குட்பட்ட பகுதிகளில் மனித உயிர்களை குடிக்கும் டாஸ்மாக் கடை அமைக்கக்கூடாது, தங்கள் பகுதியில் அமைந்துள்ள டாஸ்மாக் கடையை உடனடியாக அகற்ற வேண்டும் என்று கேட்டுக்கொண்டனர். மேலும் வருவாய்த்துறை அதிகாரிகள் அல்லது டாஸ்மாக் மாவட்ட மேலாளர் யாரேனும் நேரில் வந்து எழுத்துப்பூர்வமாக தங்கள் பகுதிக்குள் டாஸ்மாக் கடை அமைக்க மாட்டோம் என்று உறுதியளிக்கும் வரை இந்த உண்ணாவிரத போராட்டத்தை தொடர்ந்து நடத்தப்போவதாக போராட்டக்காரர்கள் அறிவித்தனர். இதனால் அந்தபகுதியில் சிறிது பரபரப்பு நிலவியது.

பொதுமக்களின் இந்த போராட்டத்தால் டாஸ்மாக் கடை தற்காலிகமாக பூட்டப்பட்டது.

இந்த நிலையில் சம்பவ இடத்திற்கு பல்லடம் தாசில்தார் சுப்பிரமணி, பல்லடம் துணை போலீஸ் சூப்பிரண்டு முத்துசாமி மற்றும் போலீசார் வந்தனர். அவர்கள் உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது சம்பந்தப்பட்ட டாஸ்மாக் கடையை மூடுவதாக அறிவித்தனர். ஆனால் பொதுமக்கள் தங்களுக்கு வாய் மொழி உத்தரவாக இல்லாமல் எழுத்துப்பூர்வ அறிவிப்பை வழங்க வேண்டும் என்றனர்.

எனவே நாளை (இன்று) பல்லடம் தாசில்தார் அலுவலகத்திற்கு முக்கியமான 10 பேர் பேச்சுவார்த்தைக்கு வாருங்கள். அங்கு டாஸ்மாக் அதிகாரிகளுடன் கலந்து பேசி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர். இதைத்தொடர்ந்து உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட்டவர்கள், நாளை மீண்டும் போராட்டத்தை தொடர்வதாக தெரிவித்து விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Next Story