அதிகாலையில் கொளுந்துவிட்டு எரிந்தது: புதுவை அரசு பஸ்கள் தீ வைத்து எரிப்பு
புதுவையில் பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த அரசு பஸ்கள் அதிகாலையில் தீவைத்து கொளுத்தப்பட்டன.
புதுச்சேரி,
புதுவை புதிய பஸ் நிலையத்தின் பின்புறம் அரசின் சாலை போக்குவரத்துக்கழகத்துக்கு சொந்தமான பணிமனை உள்ளது. இங்கு ஏராளமான பஸ்கள் இரவு நேரத்தில் நிறுத்தி வைக்கப்படுவது வழக்கம். அதேபோல் நேற்று முன்தினம் இரவு அங்கு பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்தன. அங்கு போதிய இடம் இல்லாததால் வெங்கடசுப்பாரெட்டியார் சிலை அருகில் உள்ள தமிழக அரசின் விரைவு போக்குவரத்துக் கழக பணிமனை வளாகத்தில் 11 பஸ்கள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தன.
இந்த பஸ்கள் புதுவை பல்கலைக்கழக மாணவர்களை ஏற்றிச் செல்வதற்காக பல்கலைக்கழக நிர்வாகத்தினால் ஒப்பந்தம் செய்யப்பட்டவை ஆகும். இந்த பஸ்களில் ஒன்று நேற்று அதிகாலையில் திடீரென தீப்பிடித்து எரிந்தது.
இதைக்கண்டதும் பணிமனையில் இருந்தவர்கள் ஓடிவந்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால் தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் இதுபற்றி புதுவை தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவித்தனர். அதற்குள் அருகில் நிறுத்தி வைக்கப்பட்டு இருந்த மற்ற 2 பஸ்களுக்கும் தீ தாவியது. இதனால் அந்த பஸ்களும் தீப்பிடித்து மளமளவென எரிந்தது.
இந்தநிலையில் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். தண்ணீரை பீய்ச்சி அடித்து தீயை அணைத்தனர். இருந்தபோதிலும் 3 பஸ்களும் எரிந்து நாசமாயின. இதன் சேதமதிப்பு பல லட்ச ரூபாய் இருக்கும் என்று கூறப்படுகிறது.
இந்த சம்பவம் குறித்து உருளையன்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினார்கள். இதில் அரசு பஸ்களுக்கு தீவைத்து எரித்து இருக்க வேண்டும் என்பது தெரியவந்துள்ளது.
பணிமனையில் நிறுத்தி வைக்கப்பட்டு இருக்கும் பஸ்களில் திருநங்கைகள் உள்பட சிலர் பாலியல் தொழிலில் ஈடுபட்டு வந்ததாக கூறப்படுகிறது. அவர்களை பணிமனையில் இருந்தவர்கள் விரட்டியடித்துள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்து பஸ்களுக்கு தீவைத்து இருக்கலாம் என்று போலீசார் கருதுகின்றனர். அவர்கள் யார் என்பது குறித்து தொடர்ந்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.