கம்பத்தில் நகைக்காக கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை, 2 பேர் கைது
கம்பத்தில் நகைக்காக கழுத்தை அறுத்து மூதாட்டி படுகொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக பெண் உள்பட 2 பேர் கைது செய்யப்பட்டனர்.
கம்பம்,
தேனி மாவட்டம் கம்பம் நாட்டுக்கல் தெருவை சேர்ந்தவர் ராஜகோபால். அவருடைய மனைவி துளசிமணி (வயது 70). இந்த தம்பதிக்கு 4 மகள்கள் உள்ளனர். இவர்களுக்கு திருமணமாகி 2 பேர் கம்பத்திலும், மற்ற 2 பேர் கம்பம் அருகே உள்ள புதுப்பட்டியிலும் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர்.
கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு ராஜகோபால் இறந்து விட்டார். இதனால் துளசிமணி மட்டும் வீட்டில் தனியாக வசித்து வந்தார். நேற்று அதிகாலையில் துளசிமணி வீட்டின் வாசலை சுத்தம் செய்தார். அதன்பின்னர் உள்ளே சென்றவர், நீண்டநேரமாகியும் வீட்டை விட்டு வெளியே வரவில்லை. வீடு திறந்தநிலையிலேயே இருந்தது.
இந்தநிலையில் துளசிமணியின் வீட்டுக்கு, அவருடைய உறவினர் பவளக்கொடி சென்றார். அப்போது அங்குள்ள பூஜை அறையில் கழுத்து அறுக்கப்பட்ட நிலையில் ரத்தவெள்ளத்தில் துளசிமணி பிணமாக கிடப்பதை கண்டு அவர் அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து கம்பம் வடக்கு போலீஸ் நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.
இதைத்தொடர்ந்து உத்தமபாளையம் போலீஸ் துணை சூப்பிரண்டு அண்ணாமலை, இன்ஸ்பெக்டர் உலகநாதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்றனர். பின்னர் போலீசார், உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கம்பம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், கழுத்தை அறுத்து துளசிமணியை கொலை செய்துவிட்டு, அவர் அணிந்திருந்த 4 பவுன் தங்க சங்கிலியை கொள்ளையடித்திருப்பது தெரியவந்தது. இதனால் அவர், நகைக்காக கொலை செய்யப்பட்டிருப்பதை போலீசார் உறுதி செய்தனர்.
மேலும் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டது. இந்த தனிப்படை போலீசார், கம்பம்மெட்டு சாலையில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த கம்பம் சொசைட்டி தெருவை சேர்ந்த சிங்கம் என்ற ராஜா (48) என்பவரை பிடித்து விசாரித்தனர்.
விசாரணையில், மூதாட்டி துளசிமணியை கழுத்தை அறுத்து கொலை செய்ததை ராஜா ஒப்புக்கொண்டார். இதையடுத்து அவர் கைது செய்யப்பட்டார். பழைய குற்றவாளியான இவர் மீது தேனி, திண்டுக்கல், மதுரை மாவட்டங்களில் பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன.
இதேபோல் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கம்பம் பகுதியில் வீட்டில் தனியாக இருந்த ஒரு பெண்ணை கொலை செய்து நகைகளை கொள்ளையடித்த வழக்கிலும் ராஜா தொடர்புடையவர். துளசிமணியிடம் கொள்ளையடித்த தங்கசங்கிலியை, கம்பம் நந்தகோபால் கோவில் தெருவை சேர்ந்த முத்துராஜ் என்பவரின் மனைவி லட்சுமியிடம் (45) ராஜா கொடுத்ததாக போலீசாரிடம் தெரிவித்தார். அதன்பேரில் லட்சுமியிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது திடுக்கிடும் தகவல் வெளியானது.
அதாவது துளசிமணியை கொலை செய்ய திட்டம் வகுத்து கொடுத்ததே லட்சுமி தான் என்று தெரியவந்தது. சலவைத்தொழிலாளியான லட்சுமி, துளசிமணியின் வீட்டுக்கு சென்று துணிகளை சேகரித்து சலவை செய்து கொடுத்து வந்தார். அப்போது வீட்டில் துளசிமணி தனியாக இருப்பது குறித்தும், அவர் அணிந்திருக்கும் தங்கசங்கிலி பற்றியும் ராஜாவிடம் லட்சுமி தெரிவித்தார்.
பின்னர் அவர்கள் 2 பேரும் சேர்ந்து திட்டமிட்டு நகைக்காக துளசிமணியை கொலை செய்திருப்பதை போலீசார் கண்டுபிடித்தனர். இதைத்தொடர்ந்து லட்சுமியையும் போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 4 பவுன் சங்கிலி பறிமுதல் செய்யப்பட்டது. நகைக்காக மூதாட்டி கொலை செய்யப்பட்ட சம்பவம் கம்பம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.