ஜி.எஸ்.டி. விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி
ஜி.எஸ்.டி. விவகாரத்தை எதிர்க்கட்சிகள் அரசியலாக்குகின்றன என்று மதுரையில் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் கூறினார்.
மதுரை,
மதுரை காமராஜர் சாலையில் உள்ள தமிழ்நாடு தொழில் வர்த்த சங்க அரங்கில் நடைபெற்ற பண மதிப்பிழப்பு நடவடிக்கை குறித்த விழிப்புணர்வு கையெழுத்து இயக்கத்தில் கலந்து கொண்ட மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:–
பண மதிப்பிழப்பு செய்யப்பட்ட நாளை இந்திய சரித்திரத்தில் திருப்புமுனை ஏற்படுத்திய நாளாக ஏழை மக்கள் கொண்டாடி வருகின்றனர். இந்தியாவை வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்வதற்காகவும், கள்ள நோட்டுக்களை ஒழிக்கவும், பதுக்கலில் உள்ள கருப்புப் பணத்தை வெளியே கொண்டு வந்து நாட்டின் வளர்ச்சிக்கும், ஏழை மக்களின் முன்னேற்றத்துக்கும் பயன்படுத்துவதற்காகவும் பிரதமர் நரேந்திர மோடி சரித்திரத் திருப்புமுனை வாய்ந்த பண மதிப்பிழப்பு நடவடிக்கையை கடந்த ஆண்டு இதே தினத்தில் அறிவித்தார்.
இந்த நடவடிக்கையினால் வங்கிகளில் 17.73 லட்சம் போலி கணக்குகள் கண்டறியப்பட்டன. 100–க்கும் மேற்பட்ட வங்கிக் கணக்குகள் வைத்திருந்த போலி நிறுவனங்கள் பிடிபட்டன. இதில் ஒரு நிறுவனம் மட்டும் 2,134 வங்கிக் கணக்குகள் வைத்திருந்தது கண்டறியப்பட்டது.
வங்கிக் கணக்கில் பணமே இல்லை என்று கணக்குக் காட்டிய நிறுவனம் பண மதிப்பிழப்பு நடவடிக்கைக்கு பின்னர் 2,484 கோடியை வங்கியில் செலுத்தியுள்ளது. வருமான வரி செலுத்துவோர் எண்ணிக்கை 66.53 லட்சத்தில் இருந்து 85 லட்சமாக உயர்ந்துள்ளது. பணமில்லா பரிவர்த்தனை அதிகரித்துள்ளது.
நாட்டில் திருப்புமுனையை ஏற்படுத்தும் மாற்றத்தை யாருமே பாதிப்படையாமல் கொண்டு வர முடியாது. ஜி.எஸ்.டி. கொண்டு வரப்பட்டு சில மாதங்கள் மட்டுமே ஆகிறது. இதனால் சிலர் பாதிக்கப்படலாம். ஆனால் அதற்கான விளைவுகள் நாட்டை பெரும் முன்னேற்றத்துக்கு கொண்டு செல்லும். எதிர்க்கட்சிகள் இதை வேண்டுமென்றே அரசியலாக்குகின்றனர். ஆனால் நாட்டு மக்கள் பிரதமர் நரேந்திரமோடியின் முடிவுக்கு பெரும் வரவேற்பளித்துள்ளனர்.
இவ்வாறு அவர் கூறினார்.