பண மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம், திண்டிவனத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம்
பணம் மதிப்பு நீக்கத்தை கருப்பு தினமாக அனுசரித்து விழுப்புரம் மற்றும் திண்டிவனத்தில் தி.மு.க.வினர் ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள்.
விழுப்புரம்,
மத்திய அரசு, கடந்த 8.11.16 அன்று எந்தவித முன்அறிவிப்பும் இன்றி 1,000 மற்றும் 500 ரூபாய் நோட்டுகள் செல்லாது என்று அறிவித்தது. இந்த திடீர் அறிவிப்பினால் அனைத்து தரப்பு மக்களும், வியாபாரிகளும் பெரிதும் பாதிக்கப்பட்டனர். இந்த நாளை பண மதிப்பு நீக்க கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும் என்றும், அந்நாளில் மத்திய அரசை கண்டித்து தமிழகத்தில் மழையால் பாதிக்கப்பட்ட கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தி.மு.க. சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் என்றும் அக்கட்சி அறிவித்து இருந்தது.
அதன்படி கடலூர் உள்ளிட்ட 8 மாவட்டங்களை தவிர்த்து பிற மாவட்டங்களில் தி.மு.க.வினர் நேற்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதில் விழுப்புரத்தில் மாவட்ட கலெக்டர் அலுவலக பெருந்திட்ட வளாகம் எதிரே நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மத்திய மாவட்ட செயலாளர் பொன்முடி எம்.எல்.ஏ., தெற்கு மாவட்ட செயலாளர் அங்கையற்கன்னி ஆகியோர் தலைமை தாங்கி பண மதிப்பு நீக்க நடவடிக்கையை மேற்கொண்ட மத்திய அரசை கண்டித்து பேசினார்கள். எம்.எல்.ஏ.க்கள் உதயசூரியன், ராதாமணி, வசந்தம் கார்த்திகேயன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
இதில் தலைமை செயற்குழு உறுப்பினர் ஆர்.ஜனகராஜ், தெற்கு மாவட்ட அவைத்தலைவர் ராமமூர்த்தி, மாவட்ட பொருளாளர் புகழேந்தி, துணை செயலாளர்கள் முத்தையன், மைதிலி ராஜேந்திரன், ஜெயச்சந்திரன், காமராஜ், அமிர்தவள்ளிகோவிந்தராஜ், முன்னாள் எம்.எல்.ஏ. புஷ்பராஜ், ஒன்றிய செயலாளர்கள் வேம்பிரவி, மும்மூர்த்தி, தெய்வசிகாமணி, கல்பட்டுராஜா, பிரபாகரன், விஸ்வநாதன், வசந்தவேல், நகர தலைவர் சக்கரை உள்பட பலர் கருப்பு சட்டை அணிந்தவாறு கலந்துகொண்டு மத்திய அரசை கண்டித்து கோஷம் எழுப்பினார்கள்.
இதேபோல் திண்டிவனத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு விழுப்புரம் வடக்கு மாவட்ட செயலாளர் செஞ்சி மஸ்தான் தலைமை தாங்கினார். எம்.எல்.ஏ.க்கள் மாசிலாமணி, சீதாபதி சொக்கலிங்கம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் சேதுநாதன், செந்தமிழ்செல்வன், நகர செயலாளர் கபிலன், நிர்வாகிகள் டாக்டர் சேகர், வக்கீல்கள் முத்து, ஆதித்தன், அசோகன், ஒன்றிய செயலாளர் ராஜாராம் மற்றும் தி.க.மண்டல தலைவர் தாஸ், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட செயலாளர் சேரன், இந்திய யூனியன் முஸ்லீம் லீக் கட்சி நகர செயலாளர் கமலுதீன், மனித நேய மக்கள் கட்சி மாவட்ட செயலாளர் சாதிக் உள்பட பலர் கலந்து கொண்டனர்.