பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து கருப்பு சட்டை அணிந்து அரசியல் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
திண்டுக்கல்லில், மத்திய அரசின் பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்து தி.மு.க. தலைமையில் அரசியல் கட்சியினர் கருப்பு சட்டை அணிந்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
திண்டுக்கல்,
காங்கிரஸ், தி.மு.க., இடதுசாரிகள் உள்பட 18 கட்சிகள் பணமதிப்பு நீக்கநாளான நவம்பர் 8–ந்தேதியை தேசிய அளவில் கருப்பு தினமாக அனுசரிக்கப்போவதாக அறிவித்து இருந்தன. இதையொட்டி, தி.மு.க. தலைமையில் மாநிலம் தழுவிய ஆர்ப்பாட்டம் நடந்தது. அதன்படி, திண்டுக்கல் மணிக்கூண்டு பகுதியில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
இதற்கு தி.மு.க. துணை பொதுச்செயலாளர் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர்கள் அர.சக்கரபாணி எம்.எல்.ஏ., இ.பெ.செந்தில்குமார் எம்.எல்.ஏ. ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில் இ.பெரியசாமி எம்.எல்.ஏ. பேசும்போது, ‘பணமதிப்பு நீக்க நடவடிக்கையால் எந்த நன்மையும் வந்துசேரவில்லை. குறிப்பாக, பணம் குவித்து வைத்திருந்தவர்களுக்கு எந்த பாதிப்பும் இல்லை. ஏழை, எளிய, சாமானிய மக்கள்தான் பாதிப்பை எதிர்கொண்டனர். இந்த நடவடிக்கை, இந்திய பொருளாதாரத்தை மிகவும் பாதித்துவிட்டது. இதன் பாதிப்பு இன்னும் தொடரும். மோடியின் ஆட்சி தொலையும் நாளை மக்கள் எதிர்பார்த்துக்கொண்டு இருக்கிறார்கள். எடப்பாடி பழனிசாமி அரசு ஊழல் நிறைந்த அரசு. அந்த அரசுக்கு பிரதமரும் துணை நிற்கிறார்’ என குற்றம்சாட்டினார்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரஸ் கட்சியின் மாவட்ட தலைவர்கள் அப்துல்கனிராஜா, சிவசக்திவேல், மாநகர் மாவட்ட காங்கிரஸ் தலைவர் சொக்கலிங்கம், விடுதலை சிறுத்தைகள் கட்சி மாவட்ட தலைவர் அன்பரசு உள்பட பல்வேறு கட்சிகளை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் கலந்துகொண்டனர்.
அவர்களில் பெரும்பாலானோர் பணமதிப்பு நீக்கத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் கருப்பு சட்டை அணிந்திருந்தனர். வெள்ளைச்சட்டை அணிந்திருந்தவர்களும் சட்டைப்பையில் கருப்பு ரிப்பன் அணிந்திருந்தனர். ஆர்ப்பாட்டத்தில், கலந்துகொண்டவர்கள் பா.ஜனதா அரசுக்கு எதிராகவும், பணமதிப்பு நீக்க நடவடிக்கையை கண்டித்தும் கோஷம் எழுப்பினர்.
இந்த ஆர்ப்பாட்டம் காரணமாக மணிக்கூண்டு 3 ரோடு சந்திப்பு பகுதியில் போக்குவரத்து தடைபட்டது. இதனால் வாகன ஓட்டிகள் மாற்றுப்பாதையில் பயணித்தனர்.
ஆர்ப்பாட்டத்தில், தி.மு.க. தலைமைக்கழக பேச்சாளர் திண்டுக்கல் ஐ.லியோனியும் கலந்துகொண்டு பேசினார். அவருடைய பேச்சு தி.மு.க. தொண்டர்களை வெகுவாக கவர்ந்தது. அவர் பேசும்போது, ‘தி.மு.க. தலைவர் கருணாநிதி–மோடி சந்திப்பு, எச்.ராஜா வீட்டு விழாவில் செயல் தலைவர் ஸ்டாலின் கலந்துகொண்ட நிகழ்வுகள், அரசியலுக்கு அப்பாற்பட்ட தி.மு.க.வினரின் அன்பு, பாசம், நட்பை காட்டுகிறது. ஆனால், ஒருபோதும் நட்புக்காக தி.மு.க. தன் கொள்கையை விட்டு கொடுக்காது. சிலர், கருணாநிதி–மோடி சந்திப்பால், பணமதிப்பு நீக்கத்துக்கு எதிரான ஆர்ப்பாட்டத்தை தி.மு.க. கைவிட்டுவிடும் என விமர்சித்தனர். ஆனால், இது நடந்து கொண்டு இருக்கிறது. இதுதான் தி.மு.க. கொள்கையை விட்டு கொடுக்காது என்பதற்கு சான்று. ஏனென்றால், தி.மு.க.வினரின் நட்பு உடம்பில் அணியும் சட்டை போன்றது. ஆனால், கொள்கை என்பது இடுப்பில் கட்டும் வேட்டி. நட்புக்காக சட்டையை கழற்றுவோம். ஆனால், ஒருபோதும் கொள்கையை விடமாட்டோம்’ என்றார்.