முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 4½ பவுன் நகை பறிப்பு முகமூடி கும்பல் கைவரிசை


முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் 4½ பவுன் நகை பறிப்பு முகமூடி கும்பல் கைவரிசை
x
தினத்தந்தி 9 Nov 2017 3:45 AM IST (Updated: 9 Nov 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

மேல்பாடி அருகே முன்னாள் ராணுவ வீரர் மனைவியிடம் கத்தியை காட்டி மிரட்டி 4½ பவுன் நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை போலீசார் தேடி வருகின்றனர்.

சிப்காட் (ராணிப்பேட்டை),

மேல்பாடி அருகே மகிமண்டலம்புதூர் கிராமத்தை சேர்ந்தவர் ருக்மாங்கதன், ஓய்வு பெற்ற ராணுவ வீரர். இவருடைய மனைவி லதா (வயது 45). இவர்களுக்கு 2 மகள்கள் உள்ளனர்.

இந்த நிலையில் நேற்று முன்தினம் இரவு 4 பேரும் வீட்டில் தூங்கிக் கொண்டிருந்தனர். நள்ளிரவு கதவு தட்டப்படும் சத்தம் கேட்டது. இதையடுத்து லதா கதவை திறந்தார்.

கத்தியை காட்டி நகை பறிப்பு

அப்போது முகமூடி அணிந்த 4 பேர் கொண்ட கும்பல் லதாவிடம் கத்தியை காட்டி மிரட்டினர். பின்னர் அவர் கழுத்தில் இருந்த 4½ பவுன் நகையை பறித்துக் கொண்டு மின்னல் வேகத்தில் தப்பி சென்று விட்டனர்.

இதனால் அதிர்ச்சி அடைந்த லதா கூச்சல் போட்டார். சத்தம் கேட்டதும் அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் ஓடி வந்தனர். அவர்கள் 4 பேர் கொண்ட கும்பலை தேடினர். ஆனால் அவர்கள் கிடைக்கவில்லை.

இதுகுறித்து மேல்பாடி போலீசில் புகார் செய்யப்பட்டது. இதையடுத்து மோப்ப நாய் சிம்பா வரவழைக்கப்பட்டு சம்பவ இடத்தில் இருந்து மகிமண்டலம்புதூர் - பொன்னை சாலை வழியாக சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை.

முகமூடி கும்பலுக்கு வலைவீச்சு

மேல்பாடி போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை பறித்து சென்ற முகமூடி கும்பலை தேடி வருகின்றனர்.

இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 

Related Tags :
Next Story