வேலூர் சத்துவாச்சாரியில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


வேலூர் சத்துவாச்சாரியில் குடிநீர் வழங்காததை கண்டித்து சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 9 Nov 2017 4:30 AM IST (Updated: 9 Nov 2017 2:55 AM IST)
t-max-icont-min-icon

வேலூர் சத்துவாச்சாரியில் குடிநீர் வழங்காததை கண்டித்து பொதுமக்கள் நேற்று சாலைமறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

வேலூர்,

வேலூர் மாநகராட்சி பொதுமக்களுக்கு காவிரி கூட்டுகுடிநீர் திட்டத்தில் தண்ணீர் கொண்டு வரப்படும் ராட்சத குழாயில், ஆம்பூர் பாலாற்றுப் பகுதியில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. பாலாற்றில் தொடர்ந்து தண்ணீர் வருவதால் உடைப்பு ஏற்பட்ட குடிநீர் குழாயை சீரமைப்பது காலதாமதமாகி வருகிறது.

இதனால் வேலூர் மாநகராட்சியின் ஒரு சில பகுதிகளில் சீரான குடிநீர் வழங்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. வாரத்திற்கு ஒருமுறை குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது.

சத்துவாச்சாரியில் கலெக் டர் அலுவலகம் அருகில் உள்ள கானாறு தெரு, பெரிய தெரு, தஸ்தகீர் தெரு ஆகிய பகுதிகளில் குடிநீர் வினியோகம் செய்து 15 நாட்களுக்கு மேலாவதாக பொதுமக்கள் தெரிவித்தனர்.

இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் நேற்று காலையில் காலிக்குடங்களுடன் கலெக்டர் அலுவலகம் அருகே சர்வீஸ் ரோட்டில் சாலைமறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுபற்றிய தகவல் அறிந்ததும் சத்துவாச்சாரி போலீசார் விரைந்து சென்று மறியல் செய்த பொதுமக்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர்.

அப்போது பொதுமக்கள் தங்கள் பகுதிக்கு குடிநீர் வழங்கி 15 நாட்களாகிறது. குடிநீரை அதிக நாட்கள் சேமித்து வைத்தால் டெங்கு கொசுப்புழு உற்பத்தியாகும் என்று கூறுகிறார்கள். அதனால் தண்ணீரை சேமித்து வைக்க முடியவில்லை. எனவே குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தினர்.

மாநகராட்சி அதிகாரிகளுடன் பேசி உடனடியாக நடவடிக்கை எடுப்பதாக போலீசார் தெரிவித்தனர். அதைத்தொடர்ந்து மறியலை கைவிட்டு கலைந்து சென்றனர்.

இந்த மறியல் போராட்டத்தால் சிறிதுநேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.


Related Tags :
Next Story