திருமங்கலம் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்


திருமங்கலம் அருகே பள்ளத்தில் பஸ் கவிழ்ந்து 17 பேர் காயம்
x
தினத்தந்தி 9 Nov 2017 1:00 PM IST (Updated: 9 Nov 2017 12:03 PM IST)
t-max-icont-min-icon

திருமங்கலம் அருகே அரசு டவுன் பஸ் பள்ளத்தில் கவிழ்ந்து 17 பேர் காயமடைந்தனர்.

திருமங்கலம்,

திருமங்கலத்தை அடுத்த வாகைகுளம் கிராமத்தில் இருந்து திருமங்கலத்திற்கு அரசு டவுன் பஸ் வந்தது. பஸ்சை டிரைவர் முத்துராமலிங்கம் (வயது 57) ஓட்டி வந்தார். பஸ்சில் கண்டக்டராக லோகமணி (54) உள்பட பயணிகள் இருந்தனர். பஸ் மேலஉறப்பனூரை தாண்டி வரும் போது எதிரே வந்த வாகனத்திற்கு வழி விட பஸ்சை டிரைவர் ஓரமாக ஓட்டி வந்தார்.

தற்போது மழை பெய்து இருப்பதால் ரோடு ஓரங்களில் உள்ள பள்ளங்களில் தண்ணீர் தேங்கி உள்ளது. இந்தநிலையில், பஸ் மண்ணில் இறங்கி சிறிது தூரம் ஓடி பாலம் அருகே இருந்த மண் பாதையில் இறங்கி, பக்கவாட்டில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது.

அதில் பஸ்சில் இருந்த டிரைவர் முத்துராமலிங்கம், லட்சுமி (31), ரஞ்சிதம் (65) பெரியதம்பி (37) உள்பட 17 பேர் காயமடைந்தனர். இதை பார்த்த அக்கம்பக்கத்தினர் ஓடி வந்து பஸ்சின் கண்ணாடியை உடைத்து, பயணிகளை வெளியே கொண்டு வந்தனர். பின்பு அவர்களை 108 ஆம்புலன்ஸ் மற்றும் அந்த வழியே வந்த வேறு பஸ்சில் ஏற்றி திருமங்கலம் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர்.

அங்கு அனைவருக்கும் சிகிச்சை அளிக்கப்பட்டு மேல் சிகிச்சைக்காக, வாகைகுளம் அன்னலட்சுமி (55), லட்சுமணன் (70)ஆகியோர் மதுரை அரசு ராஜாஜி ஆஸ்பத்திரிக்கு அனுப்பப்பட்டனர். விபத்து குறித்து திருமங்கலம் தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story