திசை மாறும் இளம் பருவத்தினர்


திசை மாறும் இளம் பருவத்தினர்
x
தினத்தந்தி 10 Nov 2017 9:45 AM IST (Updated: 9 Nov 2017 4:42 PM IST)
t-max-icont-min-icon

தேசிய குற்ற ஆவணக்கூடம் நடத்திய கணக்கெடுப்புப்படி, 2015–ம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் சிறப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை தொடரப்பட்ட இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 41,385 என்று கடந்த கட்டுரையில் பார்த்தோம்.

தேசிய குற்ற ஆவணக்கூடம் நடத்திய கணக்கெடுப்புப்படி, 2015–ம் ஆண்டில் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் மற்றும் சிறப்புச் சட்டங்களின் கீழ் கைது செய்யப்பட்டு, மேல் நடவடிக்கை தொடரப்பட்ட இளம் பருவத்தினரின் எண்ணிக்கை 41,385 என்று கடந்த கட்டுரையில் பார்த்தோம் அல்லவா?.. அவர்களில் சுமார் 12 சதவீதம் பேர் படிப்பறிவு இல்லாதவர்கள் என்பதும், 34 சதவீதம் பேர் ஆரம்பக் கல்வியை முழுமையாகப் படிக்காதவர்கள் என்பதும், 6 சதவீதம் பேர் ஏற்கனவே குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என்பதும்  போலீசாரின் கண்காணிப்பில் தெரிய வந்தது.

இளம் பருவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்குப் படிப்பறிவு இல்லாதது ஒரு முக்கிய காரணமாக இருந்தாலும், இன்றைய சமுதாய சூழல் அவர்களைக் குற்றச் சம்பவங்களில் ஈடுபட எப்படி துணைபுரிகிறது? குற்றச் செயல்களில் ஈடுபட்டு, திருந்தி வாழ்வதற்கான நடவடிக்கைக்கு உட்படுத்தப்பட்ட இளம் பருவத்தினர், மீண்டும் மீண்டும் குற்றச் சம்பவங்களில் ஈடுபடக் காரணம் என்ன? தினந்தோறும் பல மணி நேரத்தைப் பள்ளியில் கழிக்கும் சிறார்

களின் சிந்தனை, குற்றச் செயல்களை நோக்கித் திரும்பாமல் பார்த்துக் கொள்வதில் இன்றைய பள்ளி நிர்வாக முறை எந்த அளவுக்கு வெற்றி பெற்றுள்ளது? என்பது பற்றி பார்ப்போம்..

2011–ம் ஆண்டில் ஒரு நாள்..

நான் மதுரை நகர காவல் ஆணையராகப் பணிபுரிந்த காலத்தில், நடுத்தர வயதுடைய ஒருவர், என்னைச் சந்திக்க என் அலுவலகத்திற்கு வந்தார்.

‘ஐயா.. நான் புகார் மனு கொண்டு வரவில்லை. மனு கொடுக்கவும் விரும்பவில்லை. வாய்மொழியாக உங்களிடம் ஒரு புகார் தெரியப்படுத்தலாமா?’ என்று அனுமதி கேட்டார்.

அவரை ஒரு முறை உற்றுப் பார்த்து விட்டு, ‘புகார் மனு கொடுக்க விரும்பவில்லை என்றால் கொடுக்க வேண்டாம். உங்களது புகார் என்ன?’ என்று கேட்டேன்.

‘ஐயா.. என் பெண் குழந்தை மேல்நிலைப்பள்ளியில் படித்து வருகிறாள். வகுப்பில் படிக்கும் ஒரு சில மாணவர்கள், அவர்களது செல்போன்களில் ஆபாச வீடியோ காட்சிகளைப் பதிவு செய்து வைத்துக் கொண்டு, மற்ற மாணவர்களுக்கு வகுப்பறையில் காண்பிக்கின்றனர். சில சமயம், அந்த செல்போனை மாணவிகளிடம் கொடுக்கின்றனர். விவரம் தெரியாமல் அந்த செல்போனை வாங்கிப் பார்த்த மாணவிகள் என்ன செய்வது என்று தெரியாமல் தடுமாறிய சம்பவங்களுக்கும் நடந்துள்ளன. இந்தச் சம்பவத்தை மாணவிகளால் வகுப்பு ஆசிரியரிடம் தெரியப்படுத்த முடியவில்லை’ என்று அவரது மகள் அடைந்த மன வேதனையை என்னிடம் கூறினார் அந்த நபர்.

எழுத்து மூலமாகப் புகார் கொடுக்க அவர் ஏன் மறுத்தார் என்பதை என்னால் அப்பொழுது உணர்ந்து கொள்ள முடிந்தது.

அந்த வி‌ஷமத்தனத்தை உடனடியாகத் தடுத்து நிறுத்தாவிட்டால், நாளடைவில் பாலியல் ரீதியான குற்றங்கள் பல நடைபெற அது வழிவகுக்கும் என்பதை உணர்ந்த நான், உடனடியாகச் சம்பந்தப்பட்ட காவல்நிலைய அதிகாரிகளை அழைத்தேன்.

குறிப்பிட்ட வகுப்பறையில் நடைபெற்று வரும் அந்த இழிவான சம்பவத்தை அவர்களுக்குத் தெரியப்படுத்தி விட்டு, அறுவருப்பான அந்த செயலை எப்படி தடுத்து நிறுத்துவது என்று அவர்களின் கருத்தைக் கேட்டேன்.

‘சம்பந்தப்பட்ட மாணவர்களை அடையாளம் கண்டு, அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கலாம்’ – என்று ஒரு அதிகாரி கருத்து தெரிவித்தார்.

‘அந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் மற்றும் சம்பந்தப்பட்ட வகுப்பு ஆசிரியருக்குக் கல்வித்துறை அதிகாரிகள் மூலம் தக்க அறிவுரை வழங்கலாம்’ – என்று மற்றொரு போலீஸ் அதிகாரி கருத்து கூறினார்.

‘மாணவர்களின் செல்போன்களுக்கு ஆபாச வீடியோ காட்சிகள் எப்படி கிடைத்திருக்கும்?’ – என்ற கேள்வியை நான் எழுப்பினேன்.

‘குற்றம் செய்தவர்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுப்பதோடு நின்று விடாமல், குற்றம் செய்யத் தூண்டிய காரணிகள் எவை? குற்றம் செய்ய உதவிகரமாக இருந்தவர்கள் யார்? எனக் கண்டறிந்து, அவர்கள் மீது நடவடிக்கை எடுத்தால் தானே, அதுபோன்ற குற்றச் சம்பவங்கள் மீண்டும் நடைபெறாது’ – என்று குற்றத் தடுப்பு முறை குறித்து அங்கு கூடியிருந்த போலீஸ் அதிகாரிகளிடம் விரிவாக எடுத்துக் கூறினேன்.

அங்கிருந்த போலீஸ் அதிகாரிகள் அனைவரும் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தனர். சில நிமிடங்களுக்குப் பிறகு ஒரு அதிகாரி மெல்ல பேசத் தொடங்கினார். ‘நகரிலுள்ள செல்போன் ரீசார்ஜ் கடைகள் சிலவற்றில், ஆபாச வீடியோ காட்சிகள் செல்போனில் பதிவிறக்கம் செய்து தரப்படுவதாகக் கேள்விப்பட்டேன்’ –என்று அவர் தனது கருத்தை வெளிப்படுத்தினார்.

அவரைத் தொடர்ந்து பேசிய மற்றொரு போலீஸ் அதிகாரி, ‘சில இணையதள மையங்களில் ஆபாச வீடியோ காட்சிகளை கம்ப்யூட்டரில் மாணவர்கள் பார்க்க வசதி செய்து கொடுக்கப்படுவதாகவும், அந்த மையங்களில் இருந்தும் பள்ளி மாணவர்கள் ஆபாச வீடியோ காட்சிகளை அவர்களது செல்போன்களில் பதிவு செய்திருக்கலாம்’ என்றும் கருத்து தெரிவித்தார்.

செல்போன் ரீசார்ஜ் கடைக்காரர்களும், இணையதள மையம் நடத்துபவர்களும் பணம் சம்பாதிப்பதற்காக, இளம் பருவத்தினரின் எதிர்காலத்தைக் கெடுப்பதோடு, சமுதாயத்தில் பாலியல் ரீதியான குற்றங்கள் நடைபெறவும் துணைபுரிவதால், அவர்கள் மீது உடனடியாக நடவடிக்கை எடுக்க காவல்நிலைய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கினேன்.

அதைத் தொடர்ந்து, தவறான செயல்களில் ஈடுபட்டு வந்த கடைகளில் போலீசார் நடத்திய திடீர் சோதனையில், சில கடைக்காரர்கள் கையும், களவுமாகப் பிடிபட்டனர். அவர்கள் மீது வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, நடவடிக்கை எடுக்கப்பட்டது. சம்பந்தப்பட்ட பள்ளியின் தலைமை ஆசிரியருக்கும் நிலவரத்தை எடுத்துக்கூறி, மாணவர்கள் மீதான கண்காணிப்பை அதிகப்படுத்த அறிவுரை வழங்கப்பட்டது.

இளம் பருவத்தினர் குற்றச் செயல்களில் ஈடுபடுவதற்கான காரணங்களாகக் கண்டறியப்பட்டவைகளில் முக்கியமானவை:–

*     சிதைந்த குடும்ப உறவு கொண்ட குடும்பத்தில் வளரும் குழந்தைகள்.

*     இளம் பருவத்தினரின் கெட்ட சகவாசம்.

*     அதிருப்தி நிரம்பிய பள்ளிக்கூட சூழல்.

*     செல்போன், இணையதளம் மற்றும் ஊடகங்களின் தாக்கம்.

*     எளிதில் கிடைக்கும் மது மற்றும் போதைப் பொருட்கள்.

*     திசை தவறிய சிறார்களை நல்வழிப்படுத்தும் நோக்கத்திற்காக அரசாங்கத்தால் அமைக்கப்பட்டுள்ள சிறார் இல்லங்களில் உள்ள குறைபாடுகள்.

விடலைப் பருவத்தில் உள்ள சிறார்கள் வாழ்க்கையில் திசை மாறிச் செல்வதற்கான காரணங்கள் பல கண்டறியப்பட்டு இருந்தாலும், அவைகளின் தாக்கத்திற்கு ஆட்படாமல், சீரான முறையில் வளர அவர்களை நெறிபடுத்த வேண்டிய பெரும் பொறுப்பு பெற்றோருக்கும், ஆசிரியர்களுக்கும் உண்டு. காரணம் என்னவென்றால், இளம் பருவத்தினர் அவர்களது தினசரி வாழ்க்கையில் பாதி நேரத்தைப் பெற்றோருடனும், மீதிப் பாதி நேரத்தை ஆசிரியர்களுடன் பள்ளிக்கூடத்திலும் கழிக்கின்றனர்.

மாணவர்களை அதிக மதிப்பெண்கள் பெறச் செய்யும் நிறுவனங்களாக, பள்ளிகள் செயல்பட்டு வருவதாகவும், நீதி போதனை போன்ற வாழ்வியல் தொடர்பான பாடங்களுக்குப் பள்ளிகளில் அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுவதில்லை எனவும், ஆசிரியர்களுக்கு மாணவர்கள் மீதுள்ள அக்கறை குறைந்து வருவதால், ஆசிரியர்கள் – மாணவர்களுக்கு இடையேயான இடைவெளி அதிகரித்து வருவதாகவும் பொதுவெளியில் அடிக்கடி பேசப்பட்டு வருகின்றன.

தவறு செய்யும் இளம் பருவ மாணவர்களைக் கண்டித்து, அவர்களை நல்வழிப்படுத்த எடுக்கும் நடவடிக்கைகளுக்குப் பெற்றோர்களின் ஆதரவு கிடைப்பதில்லை என்பதும், மாறாக அப்படி எடுக்கப்படும் நடவடிக்கைகளினால் பெற்றோர்களின் வெறுப்புக்கு ஆளாக நேரிடுகிறது என்பதும் ஆசிரியர்கள் தரப்பு வாதம்.

பெற்றோர்– ஆசிரியர் உறவு நம் நாட்டில் தற்பொழுது எப்படி இருக்கிறது? அது இளம் பருவத்தினரை எந்த அளவுக்குப் பாதிப்புக்கு உள்ளாக்குகிறது? என்பது பற்றி பார்ப்போம்.

2016–ம் ஆண்டு ஜனவரி மாதத்தில் ஒரு நாள்...

ராமநாதபுரம் நகரில் அமைந்துள்ள ஒரு காவல்நிலையத்திற்கு ஒரு தொலைபேசி அழைப்பு வந்தது.

‘சார்.. நான் தலைமை ஆசிரியர். மேல்நிலைப்பள்ளியில் இருந்து பேசுகிறேன். வகுப்பறையில் பாடம் நடத்திக் கொண்டிருந்த எங்கள் பள்ளி ஆசிரியை ஒருவரை, ஒரு மாணவி கூர்மையான ஆயுதம் கொண்டு தாக்கிவிட்டார். அதிர்ஷ்டவசமாக அந்த ஆசிரியை தப்பிவிட்டார். உடனடியாகப் பள்ளிக்கூடம் வந்து, தக்க நடவடிக்கை எடுங்கள்’ என்ற அவசர அழைப்புதான் அது.

போலீசார் உடனடியாக அந்தப் பள்ளிக்கூடம் சென்று விசாரணை செய்தனர். முந்தைய தினம் பிற்பகலில், வகுப்பு முடிவதற்கு முன்பாகவே ஒரு மாணவி பள்ளியை விட்டு வெளியே சென்று விட்டாள். பாதுகாப்பு காரணங்களுக்காக வகுப்பு முடிவதற்கு முன்பு ஒரு மாணவி பள்ளியை விட்டு வெளியே செல்ல வேண்டுமென்றால், தலைமை ஆசிரியரிடம் அனுமதி பெற வேண்டும் என்பது அந்தப் பள்ளியின் விதிமுறை. அனுமதி பெறாமல் பள்ளியை விட்டுச் சென்றதால், தன்னை ஆசிரியர் கண்டித்து தண்டனை கொடுத்து விடுவார் என்ற பயம் அந்த மாணவிக்கு ஏற்பட்டிருக்கிறது. அதனால் தனது தாயாரையும் உடன் அழைத்துக் கொண்டு அன்று காலையில் பள்ளிக்கூடம் வந்துள்ளாள்.

தாயுடன் வந்த அந்த மாணவியிடம் ‘தலைமை ஆசிரியரைப் பார்த்து, அவரிடம் அனுமதி பெற்ற பின்புதான் வகுப்பறைக்குள் நுழைய வேண்டும்’ என்று கண்டிப்புடன் கூறிவிட்டார் வகுப்பு ஆசிரியை.

அதற்கு உடன்படாத அந்தத் தாய், வகுப்பு ஆசிரியையிடம் வாக்குவாதம் செய்துள்ளார். வாய் சண்டை உச்சகட்டத்தை எட்டிய பொழுது, அந்த மாணவி தன் பையில் வைத்திருந்த கூர்மையான ஆயுதத்தை (உளி) எடுத்து, ஆசிரியையைத் தாக்க முயற்சித்துள்ளாள் என்பதும், அச்சமயத்தில் அங்கிருந்தவர்கள் அந்த மாணவியைப் பிடித்து விட்டார்கள் என்பதும் போலீசாரின் விசாரணையில் தெரியவந்தது.

தற்காப்புக்காக மாணவி உளியைத் தன் பையில் வைத்திருந்தாள் என்று அந்தத் தாய் போலீசாரிடம் விளக்கம் அளித்தார்.

போலீஸ் விசாரணையின் முடிவில், அந்த மாணவியின் தாய் ஆசிரியையிடம் மன்னிப்பு கேட்டார். மாணவியின் எதிர்கால வாழ்க்கை பாதிக்கப்பட்டு விடக்கூடாது எனக் கருதிய ஆசிரியை, நடந்த சம்பவம் குறித்து மேல் நடவடிக்கை வேண்டாம் என போலீசாரிடம் தெரிவித்து விட்டார்.

பெற்றோர்களும், ஆசிரியர்களும் அவரவர் பொறுப்பு உணர்ந்து, இணைந்து செயல்பட்டால், ஒவ்வொரு குழந்தையும் அவரவருக்குப் பிடித்தமான துறையில் சாதனையாளர்களாக விளங்குவதோடு, இளம் பருவத்தினர் குற்றச் சம்பவங்களில் ஈடுபடும் சூழ்நிலையைத் தவிர்த்து விட முடியும்.

ஆரோக்கியமான மனநலத்துடன் வளரும் இளம் பருவத்தினர் தான் நாட்டின் எதிர்காலச் சொத்து. அவர்களது மனநலத்தையும், உடல்நலத்தையும் மது, போதைப் பொருட்கள் போன்றவை பாதிக்காமல் பார்த்துக் கொள்ள வேண்டிய பொறுப்பு சமூக நலனில் அக்கறை கொண்டவர்கள் அனைவருக்கும் உண்டு.

–விசாரணை தொடரும்.

சிறார்களைச் சீர்படுத்தும் இல்லங்கள்

இன்றைய சமுதாய சூழலில், கொடுங்குற்றங்களில் ஈடுபட்ட காரணத்திற்காக கைது செய்யப்பட்ட சிறார்களை, இளம்பருவத்தினர் மீதான வழக்குகளைக் கவனித்து வரும் நீதிபதி முன்பு ஆஜர்படுத்தி, அவரது அனுமதியுடன் குற்ற விசாரணை முடியும் வரை அரசாங்கம் அல்லது தொண்டு நிறுவனங்

களால் நடத்தப்படும் ‘கூர்நோக்கு இல்லங்களில்’ (Observation Homes) தங்க வைக்கப்படுகிறார்கள்.

சில கூர்நோக்கு இல்லங்கள் முறையாக செயல்படாத காரணத்தால், அங்கு தங்க வைக்கப்பட்டிருக்கும் சிறார்கள், இரவு நேரங்களில் அங்கிருந்து தப்பி ஓடிவிடுவதும், சில சமயங்களில் இல்லத்தில் உள்ள காவலர்களைத் தாக்கிவிட்டு ஓடிவிடுவதுமான சம்பவங்கள் பல தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.

வளரும் பருவத்தில் உள்ள அச்சிறார்களின் மனநிலையைப் புரிந்து கொண்டு, அதற்கேற்ப செயல்படுகின்ற சூழல் சில சமயங்களில் அந்த கூர்நோக்கு இல்லங்களில் இல்லாமல் இருப்பது, அது போன்ற அசம்பாவித சம்பவங்கள் நடைபெறக் காரணமாக அமைந்துள்ளதாகச் சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.

இளம் பருவத்தினர் மீது சுமத்தப்பட்ட குற்றம் விசாரணையில் நிரூபணம் ஆனால், அவர்களை அரசாங்கம் நிர்வகித்து வரும் ‘சிறப்பு இல்லங்களில்’ (Special Homes) அதிகபட்சமாக 3 ஆண்டுகள் தங்க வைத்து, அவர்களை நல்வழிப்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்படுகின்றன.

குடும்பச் சூழலில் அனுசரணை இல்லாமல் தவித்து வரும் இளம் பருவத்தினர்களையும், ஆதரவு இன்றி தெருக்களில் சுற்றித்திரியும் சிறார்களையும் அரவணைத்து அவர்கள் தங்குவதற்கு இருப்பிடம், உணவு, உடை, கல்வி, ஒழுக்கம் போன்றவற்றை கற்றுக்கொடுக்கும் ‘சிறார் இல்லங்கள்’ (Children‘s Homes) பல இடங்களில் அரசாங்கத்தாலும், தொண்டு நிறுவனங்களாலும் அமைக்கப்பட்டு, செயல்பாட்டில் இருந்து வருகின்றன.

Next Story