பனவடலிசத்திரம் பகுதியில் அம்மன் கோவில்களில் கொடை விழா பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு


பனவடலிசத்திரம் பகுதியில் அம்மன் கோவில்களில் கொடை விழா  பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு
x
தினத்தந்தி 10 Nov 2017 2:30 AM IST (Updated: 10 Nov 2017 12:48 AM IST)
t-max-icont-min-icon

பனவடலிசத்திரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் கொடை விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர்.

பனவடலிசத்திரம்,

பனவடலிசத்திரம் பகுதியில் உள்ள அம்மன் கோவில்களில் கொடை விழா நடந்தது. விழாவில் பக்தர்கள் முளைப்பாரி எடுத்து வழிபாடு நடத்தினர்.

கோவில் கொடை விழா

நெல்லை மாவட்டம் பனவடலிசத்திரம் அருகே உள்ள மருக்காலங்குளம் வடகாசி அம்மன், காளியம்மன் கோவில் கொடை விழா 3 நாட்கள் நடந்தது. கன்னிமூல கணபதிக்கு சிறப்பு பூஜைகளும், வடகாசி அம்மன், காளியம்மன், பைரவர், மகாப்ரதியங்காரி அம்மன், நவகிரகங்களுக்கு சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டு, சிறப்பு பூஜைகள் நடந்தன.

தொடர்ந்து குற்றாலம் தீர்த்தம் எடுத்தல், அம்மன் அலங்கார ஊர்வலம், அம்மனுக்கு சந்தன அபிஷேகமும், சிறப்பு தீபாராதனையும் நடந்தது. மழை வேண்டி பெண்கள் விரதம் இருந்து முளைப்பாரி எடுத்து சிறப்பு வழிபாடு நடத்தினர். மாவிளக்கு எடுத்து பொங்கலிட்டு வழிபாடு செய்தனர். விழாவையொட்டி பட்டிமன்றம், வில்லிசை உள்ளிட்ட கலைநிகழ்ச்சிகள் நடந்தன.

பூக்குழி இறங்குதல்

பனவடலிசத்திரம் அருகே உள்ள வண்ணான்பொட்டல் மாரியம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. விழாவில் குற்றாலம் தீர்த்தம் எடுத்தல், அம்மன் ஊர்வலம், நள்ளிரவு பூஜை, அம்மன் சிறப்பு அலங்காரம், அபிஷேகம், சிறப்பு ஆராதனை, முளைப்பாரி, மாவிளக்கு எடுத்தல், பொங்கலிடுதல் ஆகியவை நடந்தது.

ஆராய்ச்சிபட்டி காளிஅம்மன் கோவில் கொடை விழா 2 நாட்கள் நடந்தது. சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், தீபாராதனையும் நடந்தது. அம்மன் அலங்காரம் செய்து ஊர்வலம் வருதல், விளக்கு பூஜை. பூக்குழி இறங்குதல், அக்னி சட்டி ஊர்வலம், முளைப்பாரி ஊர்வலம், பொங்கலிடுதல் உள்ளிட்ட நிகழ்ச்சிகளும் நடந்தது.

அம்மன் கோவில்கள்

ஆயாள்பட்டி காளியம்மன் கோவில் திருவிழா 2 நாட்கள் நடந்தது. அம்மனுக்கு குடி அழைப்பு மற்றும் சிறப்பு வழிபாடு நடந்தது. மேலநீலிதநல்லூர் நீலிஅம்மன் கோவிலில் பொங்கல் விழாவையொட்டி சிறப்பு பூஜைகளும், வழிபாடுகளும் நடந்தன. நரிக்குடி காளியம்மன் கோவில், சண்முகநல்லூர் காளியம்மன், ரெட்டியூர் காளியம்மன் கோவில், திருமலாபுரம் பேச்சியம்மன், வடக்கு பனவடலிசத்திரம் செல்லத்தாய், சுப்பையாபுரம் காளியம்மன் கோவில், கூவாச்சிபட்டி மாரியம்மன் கோவில், மூவிருந்தாளி அம்மன் கோவில் ஆகிய கோவில்களில் கொடை விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு தரிசனம் செய்தனர்.


Next Story