வெம்பக்கோட்டை அருகே மழையால் சேதமான சாலை


வெம்பக்கோட்டை அருகே மழையால் சேதமான சாலை
x
தினத்தந்தி 10 Nov 2017 2:30 PM IST (Updated: 10 Nov 2017 2:30 PM IST)
t-max-icont-min-icon

வெம்பக்கோட்டை அருகே மழையால் சேதமான சாலை மற்றும் தரைப்பாலத்தை சீரமைக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

தாயில்பட்டி,

வெம்பக்கோட்டை அருகே உள்ளது துலுக்கன்குறிச்சி கிராமம். இங்கிருந்து சத்திரம் கிராமம் வழியாக ஏழாயிரம்பண்ணைக்கு செல்லக்கூடிய சாலை உள்ளது. இந்த பகுதியில் பல பட்டாசு ஆலைகள் உள்ளதால் அதற்காக இந்த தார்ச்சாலை அமைக்கப்பட்டது. கடந்த 2 நாட்களாக அந்த பகுதியில் பலத்த மழை பெய்து வந்த நிலையில் வெம்பக்கோட்டை வைப்பாற்றுக்கு செல்லக்கூடிய வரத்துக்கால்வாயில் மழைத்தண்ணீர் வெள்ளம் போல் ஓடியது.

இதனால் இந்த சாலை சேதமடைந்து ஒத்தையடி பாதைபோல் மாறி ஆபத்தான நிலையில் உள்ளது. மேலும் சாலையில் உள்ள தரைப்பாலமும் அதிக அளவில் சேதமடைந்து காணப்படுகிறது.

இதன் காரணமாக வாகனங்களில் செல்வோர் சாலையில் ஏற்பட்டுள்ள பள்ளத்தின் உள்ளே விழும் நிலை உள்ளது. சாலை, பாலம் சேதமடைந்து ஆபத்தான நிலையில் உள்ளதால் தினமும் பள்ளி செல்லும் மாணவர்கள், பட்டாசு ஆலைகளுக்கு செல்லும் தொழிலாளிகள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகி வருகின்றனர்.

மேலும் தரைப்பாலத்தில் தடுப்புச்சுவரும் அமைக்கப்படவில்லை. இன்னும் தொடர் மழை பெய்தால் தரைப்பாலம் முற்றிலும் சேதமடையும் நிலை உள்ளது. எனவே மாவட்ட நிர்வாகம் இந்த பகுதி மக்களின் சிரமத்தை கருத்தில் கொண்டு விரைவாக இந்த தரைப்பாலத்தை சீரமைத்து தடுப்புச்சுவர் அமைக்கவும், சாலையை சீரமைக்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. 

Next Story