கூடங்குளம் அருகே முன்னாள் ராணுவ வீரரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு


கூடங்குளம் அருகே முன்னாள் ராணுவ வீரரை கொன்றவருக்கு ஆயுள் தண்டனை நெல்லை கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 11 Nov 2017 2:00 AM IST (Updated: 11 Nov 2017 12:28 AM IST)
t-max-icont-min-icon

கூடங்குளம் அருகே முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

நெல்லை,

கூடங்குளம் அருகே முன்னாள் ராணுவ வீரரை கொலை செய்தவருக்கு ஆயுள் தண்டனை விதித்து நெல்லை கோர்ட்டில் தீர்ப்பு அளிக்கப்பட்டது.

கத்தியால் குத்திக்கொலை

நெல்லை மாவட்டம் கூடங்குளம் அருகே உள்ள மேலகிளாக்குளத்தை சேர்ந்த நடராஜன் மகன் பாபு(வயது 29). இவர் கடந்த 2013–ம் ஆண்டு அதே ஊரை சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் கதவை தட்டி உள்ளார். இதுதொடர்பாக ஊர் மக்கள் கூடி பாபுவை கண்டித்து உள்ளனர். அப்போது அந்த ஊரை சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர் ஜெயக்குமார்(65), பாபுவுக்கு எச்சரிக்கை விடுத்ததோடு, தாக்கி உள்ளார். இது பாபுவுக்கு ஆத்திரத்தை ஏற்படுத்தி உள்ளது.

இதையடுத்து பாபு, ஜெயக்குமாரை கொலை செய்ய முடிவு செய்தார். கடந்த 12.8.2013 அன்று ஜெயக்குமார் அடங்கார்குளத்தில் நின்று ஜெயப்பிரகாஷ் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த பாபு தரப்பினர், ஜெயக்குமாரை கத்தியால் குத்திக் கொலை செய்தனர். இதை தடுக்க முயன்ற ஜெயப்பிரகாசுக்கும் கத்திக்குத்து விழுந்தது.

ஆயுள் தண்டனை

இதுகுறித்து கூடங்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து பாபு, அவருடைய மாமா மேலகிளாக்குளத்தை சேர்ந்த கட்டிட காண்டிராக்டர் தர்மராஜ்(46), முத்துராஜா(26) மற்றொரு பாபு என்ற கவுஸ்(31), நாங்குநேரி தோரணகுறிச்சியை சேர்ந்த சசிமணி(41) ஆகிய 5 பேரை கைது செய்தனர். கொலை செய்வதற்காக பயணம் செய்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

இதுதொடர்பான வழக்கு நெல்லை மாவட்ட நான்காவது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நடைபெற்று வந்தபோது பாபு இறந்து விட்டார். இதையடுத்து மற்ற 4 பேர் மீதான வழக்கு விசாரிக்கப்பட்டு வந்தது. இந்த வழக்கை நீதிபதி கிளாட்சன் பிளசட் தாகூர் விசாரித்து நேற்று தீர்ப்பு அளித்தார். இதில் தர்மராஜூக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து உத்தரவிட்டார். மற்ற 3 பேரும் விடுதலை செய்யப்பட்டனர்.


Next Story