மந்திரி கே.ஜே.ஜார்ஜை பதவி நீக்கம் செய்யக் கோரி சட்டசபையில் பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும் ஜெகதீஷ் ஷெட்டர் பேட்டி
மந்திரி கே.ஜே.ஜார்ஜை பதவி நீக்கம் செய்ய கோரி சட்டசபையில் பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
பெங்களூரு,
மந்திரி கே.ஜே.ஜார்ஜை பதவி நீக்கம் செய்ய கோரி சட்டசபையில் பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும் என்று ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.
கர்நாடக சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் ஜெகதீஷ் ஷெட்டர் பெங்களூருவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:–
பதவியில் நீடிக்கக்கூடாதுகேரளாவில் சூரியசக்தி மின் தகடு ஊழலில் கர்நாடக காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் வேணுகோபாலுக்கு தொடர்பு உள்ளதாக, சூரியசக்தி மின் தகடு ஊழல் பற்றி விசாரணை நடத்திய நீதிபதி சிவரஞ்சன் தலைமையிலான குழு தெரிவித்து உள்ளது. அந்த குழு வழங்கிய அறிக்கை கேரள சட்டசபையில் நேற்று(நேற்று முன்தினம்) தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
அவர் மீதான குற்றச்சாட்டு மேல்நோட்டமாக நிரூபிக்கப்பட்டு இருப்பதால், வேணுகோபால் காங்கிரஸ் மேலிட பொறுப்பாளர் பதவியில் நீடிக்கக்கூடாது. அவரை காங்கிரஸ் மேலிடம் உடனடியாக திரும்ப அழைத்துக் கொள்ள வேண்டும். முதல்–மந்திரி சித்தராமையா இது தொடர்பாக காங்கிரஸ் மேலிடத்திற்கு அழுத்தம் கொடுக்க வேண்டும். வேணுகோபால் பற்றி கர்நாடக மக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்.
சி.பி.ஐ. வழக்குப்பதிவுவேணுகோபாலுக்கு எதிராக போராட்டம் நடத்துவது குறித்து ஆலோசித்து முடிவு எடுக்கப்படும். போலீஸ் அதிகாரி கணபதி தற்கொலையில் குற்றச்சாட்டுக்கு ஆளாகியுள்ள மந்திரி கே.ஜே.ஜார்ஜ் உடனே பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். எக்காரணம் கொண்டும் அவர் பதவியில் நீடிக்கக்கூடாது. அவர் மீது சி.பி.ஐ. வழக்குப்பதிவு செய்துள்ளது.
விசாரணை நேர்மையாக நடைபெற வேண்டுமென்றால் கே.ஜே.ஜார்ஜ் பதவியை ராஜினாமா செய்ய வேண்டும். பெலகாவியில் நடக்கும் சட்டசபையின் குளிர்கால கூட்டத்தொடர் தொடங்குவதற்கு முன்பாக அவர் ராஜினாமா செய்ய வேண்டும். இல்லாவிட்டால் சட்டசபையில் கே.ஜே.ஜார்ஜை பதவி நீக்கம் செய்யக் கோரி பா.ஜனதா தீவிர போராட்டம் நடத்தும்.
இவ்வாறு ஜெகதீஷ் ஷெட்டர் கூறினார்.