வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதை தடுக்க வேண்டும், ஜான்கிறிஸ்டோபர் அறிக்கை
வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதை தடுக்க வனத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குமரி மேற்கு மாவட்ட தி.மு.க. துணை செயலாளர் ஜான் கிறிஸ்டோபர் வலியுறுத்தி உள்ளார்.
நாகர்கோவில்,
குமரி மாவட்டத்தில் விவசாயம் முக்கிய தொழிலாக உள்ளது. மலையோர பகுதிகள் உள்பட பல்வேறு பகுதிகளில் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகமாக உள்ளன. இவை விவசாயிகளின் பயிர்களை சேதப்படுத்தி விடுகின்றன. இதனால் விவசாயிகள் ஒவ்வொரு ஆண்டும் மிகவும் பாதிக்கப்படுகிறார்கள்.
எனவே வனவிலங்குகளால் விவசாய பயிர்கள் சேதமடைவதை தடுக்க மாவட்ட நிர்வாகமும், வனத்துறையினரும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேலும் மாவட்டத்தில் திருவட்டார், திங்கள் நகர், குளச்சல் உள்ளிட்ட பணிமனைகளில் இருந்து இயக்கப்படும் பஸ்கள் பெரும்பாலானவை பழுதடைந்த பழைய பஸ்களாகவே உள்ளன. இதனால் மழை பெய்தால், பஸ்சில் உட்கார்ந்து பயணம் செய்பவர்களின் மீது மழை நீர் விழுகிறது. எனவே பழைய பஸ்களுக்கு பதிலாக புதிய பஸ்களை இயக்க வேண்டும்.
மாவட்டத்தில் பழுதடைந்த சாலைகளை சீரமைப்பதுடன், கனிம வளங்கள் அழிக்கப்படுவதை தடுக்க மாவட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
மேற்கண்டவாறு அதில் அவர் கூறியுள்ளார்.