மழையால் பாதிக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும்
புதுவையில் மழையால் பாதிக்கப்பட்ட அமைப்புச்சாரா தொழிலாளர்களுக்கு ரூ.5 ஆயிரம் நிவாரணம் வழங்க வேண்டும் என பா.ஜனதா கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
புதுச்சேரி,
புதுச்சேரி பா.ஜனதா கட்சியின் மாநில நிர்வாகிகள் ஆலோசனை கூட்டம் மாநில தலைவர் சாமிநாதன் எம்.எல்.ஏ., தலைமையில் நடைபெற்றது. மாநில துணைத் தலைவர்கள் சோமசுந்தரம், ஏம்பலம் செல்வம், துரை.கணேசன், பொதுச்செயலாளர் ரவிச்சந்திரன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
கூட்டத்தில் பா.ஜ.க. நிர்வாகிகள் இளங்கோவன், மாநில செயலாளர்கள் முருகன், நாகராஜன், ஜெயந்தி மற்றும் மாவட்ட தலைவர்கள், இளைஞரணி, மகளிர் அணி, செயற்குழு உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:–
* புதுச்சேரி மாநிலத்தில் நடைபெற்று வரும் நிர்வாக திறமையற்ற ஊழல் மலிந்த காங்கிரஸ் ஆட்சியின் அவலங்களை பொதுமக்களுக்கு தெரியப்படுத்தும் வகையில் தவளக்குப்பம் மற்றும் வில்லியனூரில் இருந்து சட்டசபை நோக்கி ஊர்வலம் செல்வது.
* காங்கிரஸ் அரசு அரசியல் பழிவாங்கும் நோக்கத்தோடு குண்டர் சட்டத்தை பயன்படுத்தி வருவதை பா.ஜ.க. வன்மையாக கண்டிக்கிறது.
* தொடர் மழையால் பாதிக்கப்பட்டுள்ள அமைப்புச்சாரா தொழிலாளர்கள், மீனவர்களுக்கு நிவாரண தொகையாக ரூ.5 ஆயிரம் வழங்க வேண்டும். பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கும் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும்.
* மழையால் சேதமடைந்த சாலைகளை உடனடியாக சரிசெய்ய வேண்டும்.
மேற்கண்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.